News
Loading...

குளத்தூர் விநாயகர் கோயில் வளாகத்தை பாராக மாற்றிய சமூக விரோதிகள்

Should the government of Tamil Nadu ban TASMAC liquor shops

குளத்தூரில் குழந்தை விநாயகர் கோயில் வளாகத்தை சமூக விரோதிகள் பாராக மாற்றி வருகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தூர் தெற்கு கண்மாய் கரையில் குழந்தை விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 10 சென்ட் பரப்பளவில் சுற்று சுவருடன் அமைந்துள்ள இக்கோயில் 200 வருட பழமையானதாகும். தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருந்த போதும் தினமும் பூஜைகள் நடப்பது கிடையாது. மேலும் கோயிலுக்கு சொந்தமாக குளத்தூரிலிருந்து கீழவைப்பார் செல்லும் சாலையில் உள்ள அடையக்குளம் கண்மாய் உட்பட 60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதை அறநிலையத்துறையில் இருந்து விவசாயத்திற்காக கட்டுக்குத்தகைக்கு விடப்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பணத்தை வசூல் செய்து வருகின்றனர். வருமானமிருந்தும் கோயில் பராமரிப்பில்லாமல் பூஜைகளின்றி பூட்டியே கிடக்கிறது. 

இதை சமூக விரோதிகள் தங்களது சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோயில் முன்பு பஜனை பக்தர்கள் மூலம் கல்தூண்கள் அமைக்கப்பட்டு கம்பிவேலிகள் அமைத்து பாதுகாத்தனர். இதை அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளுக்கு தூண்களை ஒவ்வொன்றாக அகற்றி வேலியையும் அகற்றிவிட்டனர். இதனால் கோயில் முன்பு தற்போது பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதை பயன்படுத்தி அடிக்கடி குடிமகன்கள் அப்பகுதியில் கூடுகின்றனர். அவர்கள் கூட்டமாக சேர்ந்து மது அருந்துவதும் தகாக தவார்த்தைகளால் சத்தம் போட்டு பேசுவதுமாக உள்ளனர். இதனால் கோயில் பகுதிக்கு செல்லவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அவர்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து செல்கின்றனர். 

எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோயிலை பார்வையிட்டு தினமும் பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். குடிமகன்கள் அட்டகாசத்தை குறைக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘அறநிலையத்துறைக்கு சொந்தமான குழந்தை விநாயகர் கோயிலில் தற்போது பூஜை இல்லாமல் இருப்பதுடன் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. குடிமகன்கள் கோயில் திண்ணையில் அமர்ந்து மதுஅருந்துவதும் அரட்டை அடிப்பதுமாக உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே குழந்தை விநாயகர் கோயிலின் முன்பகுதியில் சுற்றுசுவர், கம்பிவேலி போன்றவைகளை உடனடியாக அமைக்க வேண்டும். தினமும் பூஜைகள் நடத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...