News
Loading...

அபராதம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மெஷின் விநியோகம்

அபராதம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மெஷின் விநியோகம்

சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மெஷின் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்து அமலாக்க பிரிவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் மாவட்டத்தில் வடக்கு மண்டலத்தில் 23, தெற்கு மண்டலத்தில் 31, மேற்கு மண்டலத்தில் 24, கிழக்கு மண்டலத்தில் 24  என மொத்தம் 102 யூனிட் போக்குவரத்து அமலாக்க பிரிவு போலீசார் பணிபுரிகின்றனர்.

இந்த போக்குவரத்து அமலாக்க பிரிவு போலீசார் சென்னை முழுவதும் 300 இடங்களில் சோதனை நடத்தி, சாலை விதிகனை மீறும் வாகன ஓட்டிகள் மீது தினசரி 6 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டும் அபராத தொகையை தற்போது நீதிமன்றத்தில் செலுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும்போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக போக்குவரத்து போலீசார் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் போக்குவரத்து போலீசார் தவறு செய்யும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகைக்கான பணத்தை நேரடியாக வாங்காமல், ஸ்வைப்பிங் மெஷின் மூலம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தில் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மெஷின் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க ஸ்வைப்பிங் மெஷின் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன் ஆசோசனை நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்தில் இதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்க முடியாத நிலை ஏற்படும். இதற்காக வங்கி உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...