திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வர்தா புயலால் விழுந்துகிடந்த மரங்களை அகற்ற உதவிய வாலிபர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்பேட்டையை அடுத்துள்ள கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மதியரசனின் மகன் அரவிந்த். இவர் இந்த கிராமத்தில் இயங்கிவரும் அனாதை ஆசிரமத்தில் விழுந்துகிடந்த மரங்களை அகற்றுவதற்கு நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 8 நாளாக மின்சாரம் இல்லை என்பதால், அதுபற்றி கவலைப்படாமல் மரக்கிளைகளை வெட்டி அகற்றியுள்ளனர். இந்த நிலையில் திடீரென மின்சாரம் விநியோகம் செய்யப்படவே, மின் கம்பத்தில் சாய்ந்திருந்த கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த அரவிந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே அரவிந்த் உடல் கருகி பரிதாபமாக பலியானார். செவ்வாய்பேட்டை போலீசார், அரவிந்த் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி, மரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்