News
Loading...

சென்னையில் 1 லட்சம் மரக்கன்று நடப்படும்: பசுமைத் தாயகம்

சென்னையில் 1 லட்சம் மரக்கன்று நடப்படும்: பசுமைத் தாயகம்

சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பசுமைத் தாயகம் முடிவு செய்துள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சென்னையை கடந்த 12-ஆம் தேதி தாக்கிய வார்தா புயலால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வீடுகள், பேரூந்து நிறுத்தங்கள், மின் கம்பங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, சென்னையின் ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளாக விளங்கி வந்த சிறியதும், பெரியதுமான 5,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன.

சென்னையில் வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த ஒரு வாரத்தில் சரி செய்துவிட முடியும் என்றாலும் கூட, மரங்கள் வீழ்ந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கடுமையாக உழைத்தால் கூட இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும்.

அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த சென்னை மாநகரில், ஊர்திகள் வெளிவிடும் கரியமில வாயுவை உள்வாங்கி மக்கள் சுவாசிப்பதற்கான உயிர்வளியை வழங்கும் உன்னத பணியை இந்த மரங்கள்தான் செய்து வந்தன. இப்போது ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்ந்து விட்ட நிலையில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாததாகும்.

தூசு மாசுவால் பாதிக்கப்பட்ட நகரங்களில் சென்னை மாநகரம் தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் காற்று மாசுவும், தூசு மாசுவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ள நிலையில், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய மரங்களால் மட்டுமே முடியும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பசுமைத் தாயகம் அமைப்பு முடிவு செய்திருக்கிறது. சென்னையில் இப்போது நடைபெற்று வரும் புயல் நிவாரணப் பணிகள் முடிவடைந்தவுடன் இந்த பணிகள் தொடங்கி அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும்.

மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகை மற்றும் மதுஒழிப்பு பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பசுமைத் தாயகம் அமைப்பு இதுவரை தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு பராமரித்திருக்கிறது. சென்னையில் நடப்படவிருக்கும் மரங்களை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வளர்த்து பராமரிக்கும் பணியையும் பசுமைத் தாயகமே மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சவுமியா கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்