News
Loading...

ஜெ. மரணத்தில் சந்தேகம்... அப்போலோ தரும் அறிக்கை! - ஒரு தனி மனிதரின் போராட்டம்

ஜெ. மரணத்தில் சந்தேகம்... அப்போலோ தரும் அறிக்கை! - ஒரு தனி மனிதரின் போராட்டம்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அ.தி.மு.க உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த மனுவில்தான், சில உருப்படியான நகர்வுகளும், பரபரப்பைக் கிளப்பிய அதிர்வுகளும் உண்டாயின. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “எனக்கும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது” என்று சொன்னதும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம் என்று இறங்கிவந்ததும் ஜோசப் தாக்கல்செய்த மனுமீதான விசாரணையின் போதுதான். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப்பிடம் பேசினோம்.

‘‘நான் அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசி. அந்த அடிப்படையில், இந்த வழக்கைத் தொடர்ந்தேன். நம் வீட்டில் ஒருவருக்கு இந்த கதி நேர்ந்தால், நாம் பார்த்துக்கொண்டிருப்போமா? அம்மாவின் மரணச் செய்தி கேட்டபோது, நான் அப்படித்தான் உணர்ந்தேன்.

ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களே கொடுக்கப்பட்டன. அப்போலோ நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் அப்படித்தான் நடந்து கொண்டன. மருத்துவமனையில் அம்மா இருந்தபோது, ஒரு சிலரைத் தவிர, வேறு யாரையும் அவர்களைப் பார்க்க விடவில்லை. கவர்னரும் பார்க்கவில்லை, மத்திய அமைச்சர்களும் பார்க்கவில்லை. அம்மாவின் ரத்த உறவினர்கள் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. மேலும், அப்போது அம்மாவின் உடல்நிலையை விமர்சனம் செய்த 43 பேர்மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிகாரிகளுடன் காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக அம்மா ஆலோசனை நடத்தினார் என்று செய்தி வெளியானபோது, தி.மு.க தலைவர் கருணாநிதி, ‘முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்றால், ஒரு புகைப்படத்தை வெளியிட வேண்டியதுதானே’ என அறிக்கை வெளியிட்டார். அதற்காக, அவரையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், தொடர்ந்து அம்மா நலமுடன் இருக்கிறார்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்; உணவு உண்கிறார்; உடற்பயிற்சி செய்கிறார் என்றனர். அவர் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. ஆனால், திடீரென அவர் இறந்துவிட்டார் என்கிறார்கள். இது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. அதனால்தான் நான் இந்த வழக்கைத் தொடுத்துள்ளேன். நேதாஜி மரணத்தின் மர்மங்களை இப்படியான ஒரு மனுதான் வெளிக்கொண்டுவந்தது’’ என்றார்.

ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சைபற்றி ‘சீல்’ வைத்த கவரில் கோர்ட்டுக்கு அறிக்கை அளிப்பதாக அப்போலோ தெரிவித்துள்ளது. உண்மை திறக்கப்பட வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...