News
Loading...

வெட்டி விளம்பரத்துக்காக வந்த சினிமாக்காரர்கள்! - கடுகடுக்கும் கெளதமன்

வெட்டி விளம்பரத்துக்காக வந்த சினிமாக்காரர்கள்! - கடுகடுக்கும் கெளதமன்

ல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில் இறுதிவரை உறுதி காத்தவர் நடிகரும் இயக்குநருமான வ.கௌதமன். முதலில், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுப் போராட்டத்தில் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். சென்னை கடற்கரை போராட்டத்தின்போது இறுதிக்கட்டத்தில் மாணவர்களிடம் பேசியதும் சட்டசபையில் ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவு தாக்கல் ஆனதை விளக்கி மாணவர்களிடம் பேசியதும் அவர்தான். கெளதமனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ஜல்லிக்கட்டுக்கானப் போராட்டம் வெற்றியடைந்தும் முடிவு கொடூரமாக அமைந்து விட்டதே?’’

‘‘தமிழ் இன உணர்வால் ஒன்றுசேர்ந்து போராடியவர்கள் யாரும், அதன்மூலம் கிடைத்த வெற்றியைக் கொண்டாடக்கூடாது என மத்திய அரசு, மாநில அரசின் குடுமியைப் பிடித்து காவல்துறையை ஏவச் செய்துள்ளது. அதற்கு மாநில அரசும் இப்படி ஒரு கொடூரமானச் செயலைச் செய்ய முன்வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்குத் தமிழக மக்களின் நலன்மேல் எந்தவித அக்கறையும் கிடையாது. எனவேதான், இப்படி ஒரு செயலைச் செய்துள்ளனர்.’’

‘‘போராட்டத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டம் பற்றி விளக்கிப் பேசியதுடன், தமிழக அரசையும் பாராட்டியுள்ளீர்களே?’’

‘‘தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு... அவர், ‘இனி ஜல்லிக்கட்டுக்கான பிரச்னை ஒருபோதும் வராது. மத்திய, மாநில அரசுகள் இணைந்துபேசி, இதன்பிறகு சட்டசபையில் அந்த சட்டம் நிறைவேறியிருக்கிறது. மேலும், இனி யார் நினைத்தாலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தடை விதிக்க முடியாது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறும். அதற்கு நான் பொறுப்பு’ என்று உறுதியளித்தார். அதன்படியே... மாணவர்களிடத்தில், ‘நமக்கு ஆதரவாகத்தான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது’ என்று சொன்னேன்.’’

‘‘கலவரத்தைப் போராட்டக்காரர்கள்தான் ஆரம்பித்துவைத்தார்கள் என்று காவல் துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறதே?’’

‘‘அரசின் அடியாட்கள் அப்படித்தான் சொல்வார்கள். அங்கிருந்த பொதுமக்கள் கடைசிவரை அமைதியை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு போராடியவர்கள். அவர்கள், ‘இரண்டுமணி நேரம் கொடுங்கள்; நாங்களே கலைந்துவிடுகிறோம்’ என்று கூறினார்கள். ஆனால், அதைக் காவல்துறையினர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. போராட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றாலும் அவர்கள்மீது தடியடி நடத்த ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள். அதன்படியே பேச்சுவார்த்தை என்கிறபேரில் உள்ளே நுழைந்து தாக்கத் தொடங்கினார்கள். காவல்துறையினரே பல இடங்களில் வாகனங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் தீ வைத்துள்ளார்கள். அதற்கான வீடியோ எல்லோரிடமும் இருக்கிறது. ‘இளைஞர்களும் பொதுமக்களும் தீ வைக்க மாட்டார்கள்; அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆக, இப்படியே சென்றால்  கலவரம் ஏற்படாது’ என்று நினைத்து காவல் துறையினரே தீயைவைத்துவிட்டு... அந்தப் பழியைப் போராட்டக்காரர்கள்மீது சுமத்துகிறார்கள்.’’ 

‘‘போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது இப்படி ஒரு கொடூரமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமா?’’

‘‘எல்லாம் அரசியல். மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் சதி. இனி யாருமே போராட்டம் நடத்தித் தங்களுடைய உரிமைகளை வாங்கக் கூடாது. அப்படிப் போராட்டம் நடத்துபவர்களுக்கும்... அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்தக் காக்கிகளின் அராஜகத் தாக்குதல் ஞாபகத்துக்கு வர வேண்டும். போராட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழக்கூடாது. அதற்காகத்தான் அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது.’’

‘‘இறுதி நாட்களில், போராட்டக் காரர்களுக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டது உண்மைதானே?’’ 

‘‘அது, குழப்பங்கள் அல்ல... சிலரின் சதி. அரசியல்வாதிகளின் சதி ஒருபக்கம் என்றால்... சில சினிமாக்காரர்களின் சதி இன்னொரு பக்கம். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல சினிமாக்காரர்கள் வந்ததற்கு மத்தியில்... சில சினிமாக்காரர்களும் வெட்டி விளம்பரம் தேடுவதற்காக வந்தனர். அவர்களை எல்லோரும் நம்பினார்கள். ஆனால், அவர்கள் கடைசியில் போராட்டக்காரர்களைத் திசை திருப்பிவிட்டார்கள். அதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டன.’’

‘‘போராட்டம் முடிந்தப் பிறகும், மெரினாவை ஒட்டிய பகுதிகளில் போலீஸ் தாக்குதல்கள் தொடர்ந்தனவே?’’

‘‘இது காவல்துறையின் திட்டமிட்ட தாக்குதல். போராட்டக்காரர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், தேச விரோதச் செயல்கள் செய்வதாகவும் வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள். இதை நிச்சயம் நான் சும்மாவிட மாட்டேன். மனித உரிமைகள் ஆணையத்துக்குக் கொண்டு செல்வேன்.’’

‘‘கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றி?’’

‘‘எந்தவித வழக்குகளும் பதியாமல் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர்களைக் காவல்துறையினர் எவ்விதத் தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும். இதை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும்.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...