News
Loading...

சசிகலாவுக்கு எதிராகக் கொம்பு சீவும் சக்திகள்! - வீரமணி சொல்லும் ரகசியம்!

சசிகலாவுக்கு எதிராகக் கொம்பு சீவும் சக்திகள்! - வீரமணி சொல்லும் ரகசியம்!

சிகலாவை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை பலரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. தி.மு.க-வுடன் இணக்கமாக இருக்கும் கி. வீரமணி, சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது ஏன் என்ற கேள்வியுடன் பலர் அரசியல் கணக்குகளைப் போட ஆரம்பித்துள்ளனர். கி.வீரமணியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாதான் வரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டீர்களே. ஏன்?’’

‘‘அண்மைக்காலமாக, மதவாதக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சித்துவரும் நிலையில், அதுபோன்ற கட்சிகளுக்கு, தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவதற்காகவே அறிக்கை வெளியிட்டேன். அ.தி.மு.க-வுக்குள் லேசான சோதனை ஏற்பட்டிருக்கும் நேரத்தில், சரியானவர்களை அடையாளம் காட்டுவதில் தாய்க்கழகம் என்ற முறையில், எங்களுக்கு அக்கறை உள்ளது. ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்து, பல்வேறு வியூகங்களை வகுத்து, அவரின் மனப்போக்கு, சிந்தனை ஓட்டம், செயல்திறன் போன்றவற்றை அருகில் இருந்து பார்த்தவர் சசிகலா. அவரே, அ.தி.மு.க-வுக்குத் தலைமை ஏற்கத் தகுதியானவர். இது அவர்களின் உட்கட்சி விவகாரம் என எங்களால் புறந்தள்ளிவிட முடியவில்லை. பல சக்திகள் சசிகலா வரக்கூடாது என கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்கள், சசிகலாவை எதிர்ப்பதற்கு ஆரிய - திராவிட இனவாதம்தான் காரணம் என  பெரியாரின் கண்ணாடியைப் போட்டுப் பார்க்கும் எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.’’

‘‘சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அந்தக் கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இனி அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?’’

‘‘சசிகலாவின் வழிகாட்டுதல் இருந்தால்தான், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு சோதனையோ, அச்சுறுத்தலோ இருக்காது.’’

‘‘அப்போலோவில் 75 நாட்கள் என்ன நடந்தது என்று ஜெயலலிதாவை அருகில் இருந்து பார்த்துக்கொண்ட சசிகலா, வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. அப்படிப்பட்டவரின் தலைமையை ஏற்பது அந்தக் கட்சிக்கு நல்லதா?’’

‘‘ஜெயலலிதாவே, தன்னுடையே உடல்நிலை பற்றி வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என கருதக்கூடியவர். வெளிநாட்டு மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என பலர் வந்து சிறப்பான சிகிச்சைகள் அளித்தார்கள். இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் அது, இது என கூறுவது, செய்தித் தலைப்புக்கு வேண்டும் என்றால் தீனியாகலாமே தவிர, ஊசிமுனை அளவுகூட உருப்படியான பயன் ஏற்படாது.’’

‘‘அ.தி.மு.க-வுக்குள் பிளவை ஏற்படுத்த சில சக்திகள் முயல்வதாகச் சொல்லி இருந்தீர்களே?’’

‘‘ ‘ஓ.பி.எஸ் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடப் போகிறார், சசிகலாவை ஓ.பி.எஸ் எதிர்க்கிறார், சசிகலாவை தொண்டர்கள் எதிர்க்கிறார்கள்’ என்றெல்லாம் பல சக்திகள் கொம்பு சீவிப் பார்த்தன. ஆனால், உடைந்தது கொம்புதான்.’’

‘‘தமிழக அரசை மிரட்டவே தலைமைச்செயலகத்திலும், தலைமைச் செயலாளர் வீட்டிலும் வருமானவரித் துறையினரின் ரெய்டு நடந்ததாக அ.தி.மு.க-வினர் கூறுகிறார்களே?’’

‘‘இது அரசியல் ரீதியான அச்சுறுத்தலே என எண்ணும் அளவுக்கு மூன்று சந்தேகங்கள் உள்ளன. வருமானவரித் துறையினரின் ‘சர்ச் வாரன்ட்’டில் ராம மோகன ராவின் பெயர் இல்லை. அவரது மகன் பெயரே இருந்தது. காவல் துறையின் அனுமதி இல்லாமல் துணை ராணுவத்தைப் பாதுகாப்புக்கு அழைத்துள்ளனர். மூன்றாவது... அக்கிரமத்துக்கு மகுடம் சூட்டியதுபோல தலைமைச் செயலாளர் அறையையே சோதனை போட்டுள்ளனர். இதற்கு அரசின் அனுமதியை வாங்கினார்களா... தெரியப்படுத்தினார்களா என்பது தெரியவில்லை. இந்த ரெய்டு நடந்த முறையையும், காலகட்டத்தையும் பார்க்கும்போது, பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.’’

‘‘அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் ஒரே கொள்கை கொண்டவை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறாரே?’’

‘‘2016-ன் மிகப்பெரிய நகைச்சுவை இதுதான். சமூகக்கொள்கை, மொழிக் கொள்கை, மாநிலச் சுயாட்சி, இந்துத்துவா கொள்கை என எதிலாவது அ.தி.மு.க கொள்கையுடன் பி.ஜே.பி-க்கு உடன்பாடு உண்டா... இல்லையே?’’

‘‘இந்தச் சூழலில் தி.மு.க-வின்  செயல்பாடு எப்படி இருக்கிறது?’’

‘‘தி.மு.க-வின் செயல்பாடு மிகவும் கண்ணியமாக உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் தி.மு.க-வுக்கு இல்லை. அ.தி.மு.க-வின் புதிய தலைமையின்கீழ், முன்பு இல்லாத மாற்றம் தற்போது உருவாகி உள்ளது. மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா சார்பில் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள். எதிர்க்கட்சியின் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் ஆளும்கட்சி என நல்லுறவுகள் தற்போது மலரத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற நிலை மேலும் வளர வேண்டும்.’’

‘‘உங்களது அறிக்கைகளைப் பார்த்தால், நீங்கள் அ.தி.மு.க-வுடன் இணக்கமாகப் போவதுபோல தெரிகிறதே?’’

‘‘இது தாய்க்கழகம். யார் தவறு செய்தாலும் கண்டிப்போம். நல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம். கொள்கை ரீதியாக, தி.மு.க-தான் எங்களுக்கு இணக்கமான கட்சி’’.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...