News
Loading...

தி.மு.க-வில் 50 வயதைக் கடந்தவர்களுக்கே இளைஞர் அணி பதவியா?

தி.மு.க-வில் 50 வயதைக் கடந்தவர்களுக்கே இளைஞர் அணி பதவியா?

‘துரை ராமசாமி’ என்ற பெயர் வெள்ளக்கோவில் பகுதியில் 90-களில் வெகு பிரபலம். ‘டி.ஆர்.’ என்று அழைக்கப்பட்ட துரை ராமசாமி, வெள்ளக்கோவில் தொகுதியை அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கட்டியமைத்திருந்தார். அவரை எதிர்த்து அரசியல்செய்து, அந்தத் தொகுதியையே தி.மு.க-வின் வசம் கொண்டு வந்தவர்தான் முத்தூர் சாமிநாதன். அதன் பிறகு ‘வெள்ளக்கோவில் சாமிநாதன்’ என பிரபலமடைந்தார். தன் கல்லூரி காலத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக வலம் வந்த சாமிநாதன், தீவிர அரசியலுக்கு வந்தபின் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகும் படங்கள் தவிர வேறு படங்களைப் பார்ப்பது இல்லை. 

தொடர்ந்து 3 முறை வெள்ளக்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2006-2011ல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் வலம்வந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் வெள்ளக்கோவில் இணைக்கப்பட்ட பின், 2011-ல் மடத்துக்குளம் தொகுதியிலும், கடந்த தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மாவட்டத்துக்குள் இவரை எதிர்த்துக் கோஷ்டிப் பூசல்கள் தொடர்ந்துகொண்டிருந்தாலும், தலைமைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் 30 ஆண்டு காலம் ஸ்டாலின் வசப்படுத்தி வைத்திருந்த இளைஞர் அணி செயலாளர் பதவி இப்போது சாமிநாதன் கைகளில். அடக்கமும், அமைதியும் தன்னுடைய அடையாளமாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதனை சந்தித்தோம்.

‘‘ஸ்டாலின் வைத்திருந்த பொறுப்பு இப்போது உங்கள் கைகளில்... ஸ்டாலினுடன் அப்படி என்ன நெருக்கம்?’’

‘‘இளைஞர் அணிக்காக நாங்கள் செய்த பணிகளை அவர் பார்த்திருக்கிறார். எந்தத் தயக்கமும் இடையூறும் இல்லாமல் திறம்படப் பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டதன் அடிப்படையில் தான் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கை வீண்போகாத அளவுக்கு அவரின் ஆலோசனைகளைப் பெற்றுப் பணியாற்றுவேன்.’’ 

‘‘ஸ்டாலின் செயலாளராக இருந்தபோது, கட்சியைச் சேர்ந்தவர்கள் இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தனர். இனிவரும் காலங்களில் அது தொடருமா?’’

‘‘கண்டிப்பாக... தளபதி இப்போது செயல் தலைவராகி இருப்பதால் இன்னும் உற்சாகத்துடன் புதிய இளைஞர்கள் கட்சியில் சேர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இளைஞர் அணி மட்டுமல்ல... தி.மு.க-வின் மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, மகளிர் அணி என அனைத்து அணிகளும் உற்சாகத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கான ஒரு சிறப்பான சூழல் உருவாகியிருக்கிறது.’’

‘‘பல வருடங்களுக்குப் பிறகு மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்பை வழங்கியிருப்பது, மேற்கு மண்டலத்தில் தி.மு.க-வின் ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்கான முயற்சியா?’’

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைமைக் கழகம் மேற்கு மண்டலத்தில் கூடுதலாக கவனம் செலுத்திவருகிறது. தளபதியும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலப் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி, அதன் மூலம் மேற்கு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாங்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறோம்.’’

‘‘தி.மு.க இளைஞர் அணியை வலுப்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?’’

‘‘இளைஞர் அணி ஏற்கெனவே வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் வலுப்படுத்துவதற்கான அவசியம் கொஞ்சம் இருக்கிறதென்றாலும், தளபதியே அடித்தளத்தை அமைத்திருக்கிறார். அவரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று ஒரு மாளிகையைப் போல இருக்கிறது. இதைப் பராமரிப்பதுதான் எங்களுடைய முக்கியமான பணி. தொடர்ந்து புதியதாக வரக்கூடிய இளைஞர்களை இணைத்து, இளைஞர் அணியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை தளபதியிடம் பெற்று அதன்படி நடப்போம்.’’

‘‘திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் பிறந்து வளர்ந்த இன்றைய இளைஞர்கள், இப்போது திராவிட சிந்தனைகளிலிருந்து விலகிச் செல்கிறார்கள். சாதிக்கட்சிகளும் மதவாத அமைப்புகளுமே குறிப்பாக மேற்கு மண்டலத்தில் வலுப்பெறுவதை கவனிக்கிறீர்களா?  

‘‘சுதந்திரப் போராட்டமாகட்டும், மொழிப் போராட்டமாகட்டும்... படிப்படியாக இன்று மறந்தே போய்விட்டது. இளைஞர்கள் திரைப்படங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டிருக் கிறார்கள். தேர்தலில் வாக்களிப்பதற்குக்கூட சலித்துக்கொள்வதுதான் யதார்த்த உண்மை. திராவிடக் கொள்கைகளை ஞாபகப்படுத்துவதற் காகத்தான் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா போன்றவற்றை தளபதி நடத்துகிறார். ஆட்சிப் பொறுப்பு எங்களுக்கு வரும்போது நிச்சயமாக திராவிட சிந்தனைகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.’’

‘‘50 வயதைக் கடந்தால்தான் தி.மு.க-வில் இளைஞர் அணி பொறுப்பே கிடைக்குமா?’’

‘‘மாநில அளவில் வரும்போதுதான் அது பிரச்னை. ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பிறப்புச் சான்றிதழை சரிபார்த்து விட்டுத்தான் பொறுப்பே கொடுக்கிறோம். அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால்தான், மாநில அளவில் வயதான, அனுபவமுள்ள பொறுப்பாளர்களை இளைஞர் அணி கொண்டுள்ளது. வயது குறைவான ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை நியமித்து, கட்சியின் ஒட்டுமொத்த இளைஞர்களின் செயல்பாடுகளும், ஈர்ப்புத்தன்மையும் குறைந்துபோய்விட்டால் அமைப்புக்கு இழப்பு ஏற்பட்டுவிடுமே!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...