News
Loading...

இவங்கள்லாம் அப்ப எங்க இருந்தாங்கன்னே தெரியாது!

இவங்கள்லாம் அப்ப எங்க இருந்தாங்கன்னே தெரியாது!

‘‘.தி.மு.க தொடங்கப்பட்டு, அந்தக் கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில்    எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் நாங்கள் எல்லாம் வேலை பார்த்து மாயத்தேவரை ஜெயிக்க வைத்தோம்’’ என்று அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்துக்கு அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், மாயத்தேவரைச் சந்தித்தோம். வயோதிகத்தால் தளர்ந்து இருந்தபோதிலும், அவரிடம் இருந்து வார்த்தைகள் தெளிவாக வந்தன.

‘‘அ.தி.மு.க தொடங்கியதும் சந்திச்ச முதல் இடைத்தேர்தல்ல எம்.ஜி.ஆர்., என்னை வேட்பாளராக்கி அழகு பார்த்தார். அப்ப தேர்தல் பணிக்காக எஸ்.டி.எஸ் வந்தாரு. அவரு எனக்கும் குடும்ப நண்பர்ங்கிறதால தேர்தல் பணிகளைச் சிறப்பா செஞ்சாரு. நீங்க சொல்ற ஆளுங்க (திவாகரன், நடராஜன்) எல்லாம்  அப்ப இல்ல. அவங்க எங்கே இருந்தாங்கன்னே தெரியாது. ஆனா, அ.தி.மு.க-வுல அவங்க இல்லங்கிறது மட்டும் உறுதி. 

அ.தி.மு.க., இத்தனை வருஷமா இவ்வளவு வலுவா இருக்கிறதுக்கு, ‘எம்.ஜி.ஆர்’ங்கிற பெயருக்கு உள்ள பவர்தான் காரணம். அவர் ஒன்மேன் ஆர்மி மாதிரி. எம்.ஜி.ஆரைப் பார்த்துதான் ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. எம்.ஜி.ஆர் என்மேல ரொம்ப பாசமா இருப்பாரு. ‘நீ ராசியான ஆளுய்யா’னு சொல்லுவாரு. அவருகூட இருந்த சில பேரு, இல்லாததும் பொல்லாததுமா சொல்லிக் கொடுத்து எங்க ரெண்டு பேருக்குள்ள மனஸ்தாபத்த உண்டாக்குனாங்க. அ.தி.மு.க ஆரம்பிக்கப்
பட்டப்போ, எம்.ஜி.ஆர் கூட இருந்த ஆளுங்களை, அவர் இறந்ததும் ஓரம்கட்டிட்டாங்க. உண்மையான தொண்டனுக்கும் விசுவாசிக்கும் மரியாதை இல்லை. கூஜா தூக்குறவனுக்கும் பொய் சொல்றவனுக்கும்தான் காலம். அதனால நான் இப்ப அரசியல்ல இருந்து ஒதுங்கி இருக்கேன்’’ என்றவரிடம், ‘‘சசிகலா தலைமையிலான அ.தி.மு.க பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ எனக் கேட்டதும், நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்.

பிறகு, ‘‘பொதுச்செயலாளரா சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பதா பேப்பர்ல பார்த்தேன். ஒரு சின்னப்பொண்ணும் (தீபா) புதுசா வருதுன்னு சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும், கட்சிக்காகப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ரத்தம் சிந்தியிருக்காங்க. யார் தலைமைப் பொறுப்புல இருந்தாலும் அவங்களோட தியாகத்தை மனசுல வெச்சுக்கிட்டு, கட்சியைச் சிறப்பா நடத்தணும்’’ என்றார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...