News
Loading...

மொபைல் வாலட் ஆபத்து... பெட்ரோல் பங்க் விபத்து!

மொபைல் வாலட் ஆபத்து... பெட்ரோல் பங்க் விபத்து!

ரு கோடி ரூபாய் அளவுக்கான பரிசுகளை அறிவித்து பணமில்லா பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்துவரும் நிலையில், பெட்ரோல் நிலையங்களில் செல்போன் மூலம் பரிவர்த்தனை செய்வது மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 மத்திய அரசின் ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மொபைல் வாலட் (செல்போன் மூலம் பரிவர்த்தனை) என டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என மத்திய அரசு மக்களுக்குப் புத்திமதி சொல்லிவருகிறது. பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு, செல்போன்கள் மற்றும் பி.ஓ.எஸ் (பாயின்ட் ஆஃப் சேல்) போன்ற கருவிகள் தேவை. பெட்ரோல் பங்குகளில் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி ஏற்கெனவே உள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயம் இருப்பதால், அங்கு செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மொபைல் வாலட், பி.ஓ.எஸ் இயந்திரங்கள் போன்றவற்றை பெட்ரோல் பங்குகளில் ‘அபாயகரமான பகுதிக்கு’ அருகில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation - PESO) அறிவுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் முரளியிடம் பேசினோம். “இ-வேலட்களை அரசு ஊக்குவித்த உடனே, நாக்பூரில் இருக்கும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு கடினம் எழுதினோம். அதில், மொபைல் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் இருந்துவரும் நிலையில், மொபைல் வாலட்களைப் பெட்ரோல் பங்குகளில் கையாள்வதற்கானப் பாதுகாப்பு விதிமுறைகள் என்ன என்பது பற்றி கேட்டிருந்தோம். அதன் பிறகு, இதுதொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு அந்த அமைப்பு அனுப்பியது. 

 வெடிபொருட்கள் சட்டம் 2002-ன் படி, ஒரு பெட்ரோல் நிலையத்தில், இயங்கக் கூடிய ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து 6 மீட்டர் தள்ளித்தான் மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை பெட்ரோல் பம்ப் இயக்கப்படாமல் இருந்தால், அங்கிருந்து 45 செ.மீட்டர் தூரம் தள்ளிவைத்து இ-வாலட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், இது சாத்தியமே கிடையாது. பெரும்பாலும், பெட்ரோல் நிலையங்களில் எல்லா பம்புகளுமே இயக்கத்தில்தான் இருக்கும். எனவே, அங்கு மொபைல் வாலட்களையோ, பி.ஓ.எஸ் இயந்திரங்களையோ பயன்படுத்த முடியாது. 

 எனவே, ஏற்கெனவே உள்ள விதியின் படி, அந்த 6 மீட்டர் தூரத்தை, மொபைல் போன்கள் மற்றும் இயந்திரங்களுக்கான தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அதுகுறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும். காரணம், பெட்ரோல் பங்குகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதுகுறித்த சரியான விழிப்பு உணர்வு கிடையாது. பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ‘இது ஏன் ஆபத்தானது’ என்பது பற்றி அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும். 

 பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெட்ரோலுக்கும், தற்போது உள்ள பெட்ரோலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெட்ரோலின் எரியும் தன்மையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டிக்கொண்டே போகின்றன. தற்போதுள்ள பெட்ரோலுக்கு எளிதில் தீப்பற்றும் தன்மையும், விரைவில் ஆவியாகும் தன்மையும் உள்ளன. இந்தப் பெட்ரோல் சிறு தீப்பொறி இருந்தாலே பற்றிவிடும். இதனால் ஏற்படும் விபத்துகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், செல்போனில் ஒருவர் பேசியபோது, திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் ஏற்றி வரும் லாரியைத் திறந்து அளவிட்டபோது, ஊழியர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தியதால், லாரியில் தீப்பற்றிய சம்பவமும் உண்டு. எனவே, இது பற்றிய விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுடன், பெட்ரோல் நிலையங்களில் ஜாமர் கருவிகளை வைத்துப் பாதுகாப்பை அதிகப்படுத்தலாம்” என்றார்.

 ‘டிஜிட்டல் இந்தியா’வில் இப்படியும் ஆபத்துகள் இருக்கின்ன!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்