News
Loading...

போலீஸோடு செல்ஃபி! - திருப்புமுனை திருச்சி

போலீஸோடு செல்ஃபி! - திருப்புமுனை திருச்சி

ல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தை சென்னை மெரினா, அலங்காநல்லூர், மதுரை, கோவை என பல இடங்களில் கலவரமாக மாற்றியது காவல்துறை. இப்படி தமிழகமே கலவரக்காடாக இருந்தபோது,திருச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் துளியளவும் பிரச்னை இல்லாமல் அமைதியாக முடிந்தது. இதற்குக் காரணம் திருச்சி போலீஸாரின் அணுகுமுறைதான்.

திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. மாவட்ட எஸ்.பி செந்தில்குமார், ‘வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்’ என வாட்ஸ்அப்பில் இளைஞர்களுக்கு மெசேஜ் அனுப்பியதோடு, ‘காவல்துறை பல இடங்களில் மாணவர்களுக்குக் குடிநீர் வழங்கியும், முதல் உதவி அளித்தும், போக்குவரத்துக்கு வசதி செய்தும் வருகின்றனர்’ என நம்பிக்கையை விதைத்திருந்தார்.  

திருச்சி மாநகரில் நீதிமன்றம் அருகே நடந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்துகொண்டனர். கடந்த 21-ம் தேதி திருச்சியில், நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள், கலைந்து செல்லாமல் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில், 22-ம் தேதி இரவிலிருந்தே போலீஸார் கூடுதலாகக் குவிக்கப்பட்டனர்.

சென்னை மெரினாவில் அவகாசம் கேட்டதைப்போலவே திருச்சி மாணவர்களும் கேட்டார்கள். அவர்களிடம் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார், விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலர் கலைந்து சென்றாலும், இறுதியாக 500-க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினர். இந்த மாணவர்கள் மீது தடியடி நடந்துவிடக்கூடாது என, மாணவர்களுக்குத் துணையாக நின்றார்கள்.

உறுதியாக இருந்த மாணவர்களிடம் இறுதியாகப் பேசிய மயில்வாகனன், “ஆறு நாட்களாக எப்படி உங்களுடன் நட்போடு இருந்தோமோ, அதே நட்போடுதான் கேட்கிறேன். உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்கள் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. போராட்டத்தின் முடிவில் திருச்சியில் ஏதாவது வன்முறை நிகழ்ந்தால் அந்தக் கறைகளுக்கு நீங்கள் பொறுப்பாகிவிடவேண்டாம். உங்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ளதால் தொடர்ந்து பேசுகிறேன். நீங்கள் மழையில் நனைந்தபோது நனைந்தும், பனியில் நடுங்கியும், வெயிலில் காய்ந்தும் நாங்கள் உங்களோடுதான் இருந்தோம். உங்கள் தமிழ்ப் பற்றைப் பாராட்டுகிறேன். ஆனால், உங்களின் உணர்வைவிட உங்களுக்கு அனுபவம் குறைவு. எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். நல்லவிதமாகப் போராட்டத்தை முடித்து, இந்த வெற்றியைக் கல்லூரிகளில் போய்க் கொண்டாடுங்கள். யார் மீதும் நாங்கள் வழக்குப்பதிய மாட்டோம்” என உருக்கமாகப் பேசினார். இந்தப் பேச்சு, போராட்டத்தை நல்லவிதமாக முடிக்க வைத்தது.

போலீஸோடு செல்ஃபி! - திருப்புமுனை திருச்சி

அதன்பின் மாணவர்கள், போலீஸாரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டும் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டும் கலைந்து சென்றார்கள். அடுத்த நாள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மாணவர் குழு நன்றி கூறியது. ‘இந்த அணுகுமுறை தமிழகம் முழுவதும் இருந்திருக்கக்கூடாதா’ என நினைக்க வைத்துள்ளது திருச்சி.

போராடிய மாணவர்கள் நம்மிடம், “மயில்வாகனன், ஆரம்பம் முதலே எங்களுடனேயே இருந்தார். மழையில் நாங்கள் நனைந்தபோது அவரும் நனைந்தபடி பாதுகாப்பு கொடுத்தார். பல லட்சம் பேர் வந்தாலும் துளியளவும் அசம்பாவிதம் நடக்கவில்லை. அதற்கு, போலீஸாரின் அணுகுமுறைதான் காரணம். பல வகையில் எங்களுக்கு உதவியதால் அவர்கள் மீது எங்களுக்கு மதிப்பு உயர்ந்தது. அதனால்தான் தமிழகம் முழுவதும் நடந்தது போல திருச்சியில் எதுவும் விபரீதம் நடக்கவில்லை’’ என்றார்கள்.

போலீஸோடு செல்ஃபி! - திருப்புமுனை திருச்சி

மயில்வாகனன் நம்மிடம், ‘‘ஆரம்பம் முதலே போராடிய மாணவர்களுக்கும் எங்களுக்குமான உறவு சரியாக இருந்தது. அவர்களின் உணர்வுகளை மதித்து, தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தோம். தினமும் மூன்று  அல்லது நான்கு முறை போராட்டக்குழுவினரை சந்தித்து, போராட்டச் சூழலையும், போராட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள் குறித்தும் விளக்கினோம். மாணவர்கள் போராட்டம் திசை மாறிவிடக்கூடாது என்கிற பதற்றம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்கள். இறுதிநாளில் உண்மையான சூழலை எடுத்துச் சொன்னபோது நிலவரம் புரிந்து கிளம்பிச் சென்றார்கள். அதைமீறியும் சிலர் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள், அவர்களுடனும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதனால் திருச்சியில் ஒரு துளியும் பிரச்னை இல்லாமல் போராட்டம் முடிந்தது. இது இரவு பகலாக உழைத்த காவலர்களுக்குக் கிடைத்த வெற்றி” என்றார். 

திருச்சியில் முடிந்ததுபோல ஏன் மெரினாவிலோ, அலங்காநல்லூரிலோ முடியவில்லை?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...