News
Loading...

பராக் பராக்... பான்பராக் - ஒரு டைரிக் குறிப்பு... - உதறலில் காக்கிகள்!

பராக் பராக்... பான்பராக் - ஒரு டைரிக் குறிப்பு... - உதறலில் காக்கிகள்!

குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்களிடம் இருந்து, மாமூல் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய டைரி, கடந்த ஜூலை மாதம், வருமானவரித் துறை அதிகாரிகளிடம் சிக்கியது. அந்த விவகாரத்துக்கு  மீண்டும் உயிர் கொடுத்துள்ளார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்.

இதுகுறித்து அவர், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘2011 முதல் 2016-ம் ஆண்டுவரை சட்டவிரோத பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில், தொடர்புடையதாகக் கருதப்படும் காவல் துறை அதிகாரிகளிடம், நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.  தலையீடுகளைத் தவிர்க்க சென்னை போலீஸ் இடம்பெறாத, வேறு விசாரணை அமைப்பு மூலம் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், பான் மசாலா தயாரிப்பாளர்களிடம் இருந்து மாமூல் பெற்ற அதிகாரிகளின் பெயர்களையும் அந்தக் கடிதத்தில் ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். இது, போலீஸார் மத்தியில் பெரும் கலக்கத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களைச் சேமித்து வைக்கவும் விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார். ஆனால், அந்த போதைப் பொருட்கள் சென்னையில் வெளிப்படையாகவே கடைகளில் விற்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 2016 ஜூலை மாதம் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 30 குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், குடோன்கள் என அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தில் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பான், குட்கா தயாரிப்பாளர்கள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வெளியான தகவலை அடுத்து இந்தச் சோதனைகள் நடந்தன. இந்தச் சோதனையில்தான், தமிழக போலீஸை கதிகலங்கவைத்த, அந்த டைரியும் சிக்கியது. அதில், குட்கா வியாபாரிகள், எந்தெந்த அதிகாரிகளுக்கெல்லாம் மாமூல் கொடுத்தார்கள் என்ற விவரம் இருந்தது. மாமூல் வாங்கிய அதிகாரிகள் எல்லாம் ஐ.பி.எஸ் அதிகாரிகள். சென்னை மாநகர காவல் துறையில் முக்கியப் பதவியில் இருந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்கு மாதம் 20 லட்சம் ரூபாய் மாமூல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு சில அதிகாரிகளின் பதவிகளைக் குறிப்பிட்டு பத்து லட்சம், ஏழு லட்சம் மாமூல் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் சிலர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜையும் இழுத்துவிட்டனர். அந்த ரிப்போர்ட்டை நம்பிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஜார்ஜ் மீது கடுமையான கோபத்தில் இருந்தார். தனக்கு முதலமைச்சரிடம் ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்ற, ஜார்ஜே களத்தில் இறங்கினார். இந்த விவரங்களை ஜார்ஜ் முதலமைச்சருக்கு அனுப்பினார். இந்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு, அப்போது விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு, தேர்தல், ஜெயலலிதா உடல்நிலை போன்ற காரணங்களால் அந்த விசாரணை கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் வந்த பிறகு, இந்த விவகாரம் அமுங்கிப்போனது.

இதற்கிடையில், பதவி நீட்டிப்புப் பெற்று, தமிழக போலீஸ் டி.ஜி.பி-யாக இருந்த அசோக்குமார் விருப்ப ஓய்வில் சென்றார். அவர் விருப்ப ஓய்வில் சென்றதற்கு இந்த டைரி விவகாரமும், சென்னை போலீஸ் கமிஷனர் கொடுத்த ரிப்போர்ட்டும்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு, ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராகவே நீடித்தார். இப்போது அவருக்கு சிக்கல் ஏற்பட்டு, அவரும் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், பான் மசாலா, குட்கா விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பலரையும் பதறவைத்துள்ளது. ராம மோகன ராவுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என்று யோசிக்க வைத்துள்ளது. அதை உறுதிப்படுத்தும்வகையில், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “குட்கா விவகாரத்தில், ‘அரசியல் சட்டப் பதவி வகித்த’ ஒருவரின் உறவினரும், மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகனும் ஈடுபட்டிருந்ததாக அப்போதே சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. `தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக் போன்றவற்றை தமிழகத்தில் தாராளமாக விநியோகித்தது யார்? அவர்களுக்கும் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு? அதில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகள் யார், யார்?’ என்பது பற்றியெல்லாம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, காவல் துறையில் உள்ள ‘கறுப்பு ஆடுகள்’ களையப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

தமிழக அரசாங்கம் இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...