News
Loading...

ரோகித்... லோதா... சேகர் ரெட்டி! - முக்கோண பணப்பரிமாற்றம்

ரோகித்... லோதா... சேகர் ரெட்டி! - முக்கோண பணப்பரிமாற்றம்

மிழகத்தில் ஆளும் கட்சியின் கஜானாவாக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோகித் தாண்டன். டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ரோகித் தாண்டன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது, சேகர் ரெட்டிக்காக இவர் பணத்தை மாற்றிக்கொடுத்தது கண்டுபிடிக்கப் பட்டது. உஷாரான அதிகாரிகள், மறுநாளே சேகர் ரெட்டி வீட்டில் சோதனை போட்டனர். இவர்கள் இருவருக்கும் மையப்புள்ளியாக இருந்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த லோதா. தற்போது மூவரும் சிறையில் உள்ளனர். 

வழக்கறிஞர் ரோகித் தாண்டன் டெல்லியில் உள்ள சட்ட வல்லுநர்கள் மத்தியிலும், நீதிமன்றங் களிலும் மிகப் பிரபலமானவர். இவருடைய தந்தையும் மகனும் வழக்கறிஞர்களே. இவர் தந்தை உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்து பிறகு ஹரியானா மற்றும் சண்டிகர் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தார். அப்பாவின் செல்வாக்கை வைத்து நீதித்துறையில் அதீத வளர்ச்சியடைந்து வந்த ரோகித், 2005-ம் ஆண்டு தனது நண்பர் விவேக் கோலியுடன் சேர்ந்து சட்ட ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பிறகு 2014-ம் ஆண்டு டெல்லியில் மற்றொரு சட்ட ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கியதோடு அதற்கு தன் மகனை நிர்வாகியாகவும் நியமித்தார். சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி லாபி செய்வதே இந்தச் சட்ட ஆலோசனை நிறுவனத்தின் வேலையாக இருந்துள்ளது. ரோகித் கடந்த ஆண்டு 100 கோடி செலவில் தன் மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணத்தில் அரசியல் புள்ளிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். அப்போதுதான் வருமானவரித் துறையின் கழுகுப் பார்வையில் ரோகித் சிக்கியுள்ளார்.

ஹரியானா அல்லது சண்டிகர் நீதிமன்றத்தில் நீதிபதியாவதற்கு தொடர்ந்து லாபி செய்து வந்துள்ளார். இதற்காக பல கோடிகளை வாரி இறைத்துள்ளார். இவற்றை எல்லாம் மோப்பம் பிடித்த வருமானவரித் துறை 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது வீட்டில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான பணத்தையும் ஆவணங்களையும் கைப்பற்றியது. ரெய்டின்போது ‘தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட 125 கோடி மதிப்பிலான சொத்துகளும் கணக்கில் காட்டப்படாதவை’ என ஒப்புக்கொண்டார். அதன் பிறகும் வருமானவரித் துறையினர் தொடர்ந்து ரோகித் தாண்டனை கண்காணித்து வந்துள்ளனர்.

நவம்பர் 8-ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கைக்குப் பிறகு பல கறுப்புப் பண முதலைகள் பதுக்கி வைத்திருந்த பணத்தை மாற்ற தகிடுதத்த வேலைகளில் இறங்கினர். இதில் ரோகித் தாண்டனும் ஒருவர். அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய நோட்டுகள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்படுவதாக வருமானவரித் துறை மற்றும் அமலாக்கப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. நீண்ட கண்காணிப்புக்குப் பிறகு வருமானவரித் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்குள் அதிரடியாக நுழைய... பெட்டிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 14 கோடி ரூபாயையும் கைப்பற்றினர். அதில், 2.5 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்.

ரோகித் தாண்டனின் வீட்டில் இருந்த ஆவணங்களை ஆராய்ந்தபோது அவருக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த லோதா மற்றும் சேகர் ரெட்டிக்கும் இடையிலான முக்கோணத் தொடர்பை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தனர். இதனால்தான் ரோகித் தாண்டனின் வீட்டில் ரெய்டு நடந்த மறுநாளே, அதாவது டிசம்பர் 11-ம் தேதி சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

ரோகித் தாண்டனை வருமானவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘இதுவரை 70 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளோம். இதில் 20 கோடி ரூபாய் லோதா மூலம் எனக்கு வந்தது. லோதா மூலம் வந்த பணம் முக்கிய அரசியல் புள்ளிகளுடையது.  பணத்தை மாற்ற நாங்கள் வங்கிகளுக்குச் செல்வதில்லை; வங்கி அதிகாரிகள் எனது வீட்டுக்கே வந்து 50 கோடி  மதிப்பிலான பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்துச்சென்று மாற்றிக்கொடுத்தனர். இதற்காக வங்கி அதிகாரிகளுக்கு 13 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தோம்’’ என கூறியுள்ளார். ரோகித் தாண்டனுக்கு 51 கோடி ரூபாயை மாற்றிக்கொடுத்த கோடக் மகேந்திரா வங்கி மேலாளர் ஆஷிஷ் குமாரையும் அமலாக்கத் துறையினர் கைதுசெய்துள்ளனர். ஆஷிஷ் குமார், வங்கியில் 11 போலி கணக்குகளை ஆரம்பித்து 51 கோடி ரூபாயை மாற்றிக்கொடுத்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ரோகித் தாண்டனின் சொத்து மதிப்பு வருமானவரித் துறை அதிகாரிகளையே மலைக்க வைத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அதிகாரிகள், ‘‘ரோகித்துக்கு டெல்லியில் மட்டும் 3 பங்களாக்கள் இருக்கின்றன. இதில் ஒரு பங்களா மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 18 வங்கிக் கணக்குகளை வைத்துள்ளார். குற்றப்பிரிவு போலீஸார், அவரது வாடிக்கையாளர் பட்டியலை ஆராய்ந்தபோது, அதில் பல ஆயுத வியாபாரிகளின் பெயர்கள் இருந்துள்ளன. சிறையில் இருந்த ஆயுத வியாபாரிகளுக்கு இவர்தான் ஜாமீன் எடுத்துக் கொடுத்துள்ளார். அகஸ்டாவெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ள கவுதம் கைதானுக்கு சட்ட உதவிகளை ரோகித்தான் செய்துவருகிறார். தற்போது ரோகித் தாண்டன், லோதா, சேகர் ரெட்டி என மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். சேகர் ரெட்டியிடம் இருந்து லோதாவுக்கும், லோதாவிடம் இருந்து ரோகித்துக்குமாக இந்தப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம்’’ என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...