News
Loading...

முன்னாள் தலைமைச் செயலாளரைக் காணவில்லை?!

முன்னாள் தலைமைச் செயலாளரைக் காணவில்லை?!

முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர் பேட்டி கொடுத்து பரபரப்பு பற்றவைக்கிறார் என்றால், இன்னொரு முன்னாள் தலைமைச் செயலாளர் காணாமல் போய் அனைவரையும் பதறவைத்துக் கொண்டிருக்கிறார். விஷயம் இதுதான்....

‘முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியைக் காணவில்லை’ என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சமூக ஊடகங்களில் போஸ்டர் போட்டு தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறது. என்ன ஆச்சு என்ற பதைபதைப்போடு, அந்த இயக்கத்தின் தலைவரும் தகவல் உரிமை ஆர்வலருமான சிவ.இளங்கோவிடம் விசாரித்தோம்.

“2012-ல், அப்போதைய அ.தி.மு.க அரசு, தங்களோட ‘சாதனைகளை’ விளக்கி இந்தியாவில் உள்ள பல பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்தது. ‘இந்த விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, இந்தியாவில் எந்தெந்தப் பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரங்கள் தரப்பட்டன’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக ‘செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை’யிடம் கேட்டிருந்தோம்.  பதில் வரவில்லை. மேல்முறையீடு செய்தும் பதில் வராததால் தலைமைத் தகவல் ஆணையருக்கு அப்பீல் செய்தோம். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு 7.1.2015 அன்று தலைமைத் தகவல் ஆணையத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலாளராக இருந்து, ஓய்வுபெற்ற மறுநாளே தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.ஸ்ரீபதியிடம்தான் மனு விசாரணைக்கு வந்தது. 

தலைமை ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி, நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்று தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட எஸ்.எஃப்.அக்பர் அலி ஆகியோர் முன்னிலையில்தான் என் அப்பீல் விசாரணை நடைபெற்றது.

பொதுவாக நான் எந்த அரசு அலுவலகத்துக்குப் போனாலும் உட்கார்ந்துதான் பேசுவேன். அது மக்களுக்குத் தரப்பட்டிருக்கும் உரிமை. தலைமை தகவல் ஆணையத்திலேயும் பொதுமக்கள் அமர இருக்கைகள் உண்டு. என் மனு விசாரணைக்கு வந்ததும், வழக்கம் போல நான் அந்த இருக்கையில் உட்கார்ந்தேன். தலைமை ஆணையருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘நீங்க எழுந்துதான் நிக்கணும்’ என்றார். ‘நான் முடியாது’ என உறுதியாக இருந்தேன். உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, 3 நாட்கள் என்னை ரிமாண்ட் செய்தார்கள்.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 18-வது பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நானே என் வழக்கை நடத்தினேன். அரசுத் தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்துமுடித்த பிறகு, ‘இந்த சாட்சிகளுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பே இல்லை. சம்பவம் நடந்தபோது உள்ளே இருந்த தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி, தகவல் ஆணையர் அக்பர் அலி, டைப்பிஸ்ட் உள்ளிட்ட 5 பேரை சாட்சியமா சேர்க்கணும்’ என்று ஒரு மனுத்தாக்கல் செய்தேன். அடுத்த முறை இந்த விசாரணை வந்தபோது, ‘இவர் கொடுத்த விண்ணப்பத்தில், ஸ்ரீபதி உள்ளிட்ட சாட்சிகளோட முகவரிகள் இல்லை. தகவல் ஆணைய பதிவாளரிடம் கேட்டுள்ளேன். முகவரியை வாங்கி எல்லோருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்துவிடுவேன்’ என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொன்னார்.

முன்னாள் தலைமைச் செயலாளரைக் காணவில்லை?!

கடந்த டிசம்பர் 26-ம் தேதி திரும்பவும் 26-வது முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வழக்கறிஞர் எட்வின் புதிதாக ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதில், ‘இந்த வழக்குக்குத் தேவையான சாட்சிகளை விசாரித்துவிட்டோம். எதிர்த்தரப்பு மனுவில் சிலபேரோட பெயர்களைக் குறிப்பிடவில்லை. முகவரியும் இல்லை. அதனால், சம்மன் அனுப்ப முடியவில்லை. அதனால், இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை’ என்று சொன்னார்.

தலைமைச் செயலாளராகவும் - தலைமைத் தகவல் ஆணையராகவும் இருந்த ஸ்ரீபதி, முன்னாள் நீதிபதியாக இருந்த எஸ்.எஃப்.அக்பர் அலி ஆகியோரை ஒரு சாதாரண மனிதன்   விசாரணை செய்வதை அரசு வழக்கறிஞர் விரும்ப வில்லை. அதற்காக தலைமைச் செயலாளராக இருந்த ஒருத்தரோட முகவரியே தெரியவில்லை எனச் சொன்னார். அதற்குப் பிறகுதான் ‘முன்னாள் தலைமைச் செயலாளரைக் காணவில்லை’ என நாங்கள் சமூக ஊடகங்களில் அறிவிப்பை வெளியிட்டோம்” என்றார் சிவ.இளங்கோ. 

அரசு வழக்கறிஞர் எட்வினிடம் பேசினோம். “முன்னாள் தலைமைச் செயலாளரின் முகவரி தெரியுமா... தெரியாதா என்பதல்ல கேள்வி. அவருடைய தரப்பு சாட்சிகளை அவர்தான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரவேண்டும். அதற்கு நீதிமன்றத்தில் மனுப் போடவேண்டும். நீதிமன்றம் சம்மன் வழங்கும். அதைக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களைக் காவல் துறையினர் அழைத்து வருவார்கள். இதுதான் நடைமுறை. அவர் ‘5 பேரை அழைத்து வரவேண்டும்’ என்று மனுப் போட்டார். ஆனால், அவர்களுடைய முகவரியைக் குறிப்பிடவில்லை. எனவே, சட்டப்படி, நீதிபதி சம்மன் கொடுத்தால் எந்த முகவரிக்குக் கொடுப்பீர்கள் என்றுதான் நான் கேட்டேன்” என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...