News
Loading...

தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்: சீமான் அறிவிப்பு

தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்: சீமான் அறிவிப்பு

காளைகளை துன்புறுத்தக் கூடாது என்ற பெயரில் ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி, இந்த ஆண்டு பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

''இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். ஆனால் எப்போது, எங்கே நடத்தப்படும் என்ற தகவலை நான் முன்கூட்டியே அறிவிக்கப்போவதில்லை.

கடந்த முறை தெரியப்படுத்தியதால்தான், என்னைக் கைது செய்தார்கள். இம்முறையும் என்னைக் கைது செய்யலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடந்தபிறகு என்னைக் கைது செய்துகொள்ளுங்கள்.

கேரளாவில் யானைகளை ஓடச்செய்து போட்டிகள் நடத்துகின்றனர். ராணுவத்தில் ஒட்டகம், குதிரை போன்ற விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதெல்லாம் பீட்டா அமைப்புக்குத் தெரியவில்லையா?

ஜல்லிக்கட்டு என்பது உண்மையில் ஏறு தழுவல்தான். காளைகளை அணைத்து விளையாடும் போட்டி இது. அது உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

மேலும் சில கோரிக்கைகள்

கடந்த ஆண்டு தைப்பூசத்தை பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரியிருந்தேன். ஆனால் அறிவிக்கவில்லை. இம்முறை இது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க உள்ளேன்.

கடற்கரையில் இருந்து சிவாஜி சிலையை அகற்றக் கூடாது. அப்படியே இடம் மாற்றம் செய்தாலும் அதை மெரினாவில்தான் வைக்க வேண்டும்.

மோடியால் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது. அதை ஒழிப்பதாகச் சொன்னவர் கட்டுக்கட்டாக பிடிபடும் புதுநோட்டுகள் குறித்து என்ன சொல்கிறார்? கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான கட்டமைப்பு முதலில் தயாராக வேண்டும்'' என்றார்.

விவசாயிகள் இறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் இறப்பு குறித்து பேசும்போது, ''மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி வாக்களிக்கின்றனர். இதனால்தான் தமிழகத்தின் நிலை இவ்வாறு ஆகியுள்ளது. மக்கள் மாறினால்தான் மாற்றம் நிகழும்.

உணர்வுள்ள உணவு உண்ணும் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வரும் 11-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்''.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்