News
Loading...

இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்! - திவாகரன் ஸ்டேட்மென்ட்

“இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்!” - திவாகரன் ஸ்டேட்மென்ட்

வ்வோர் ஆண்டும் சசிகலாவின் கணவர் ம.நடராசனால் தஞ்சையில் நடத்தப்படும் தமிழர் கலை இலக்கியத் திருவிழா, வழக்கத்தைவிட மிக பிரமாண்டமாக இந்த ஆண்டு நடைபெற்றது. திவாகரன் தன் ஆதரவாளர்களுடன் பங்கேற்றது, மெகா சைஸ் சசிகலா படம், ஜல்லிக்கட்டு படம் என இந்த ஆண்டு இன்னும் வித்தியாசங்கள். எப்போதும் நடராசன்தான் இந்த விழாவில் பொங்கித் தீர்ப்பார். இந்த ஆண்டு திவாகரன் பொங்கித் தீர்த்தார்.  

வழக்கமாக நடராசன் நிகழ்ச்சி என்றால், மூன்று நாட்களும் தமிழக உளவுப்பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் மிஸ்ஸிங். ‘பட்டமில்லா பேரரசன்’, ‘அரசியல் சதுரங்கத்தின் கிங் மேக்கர்’ என்று ம.நடராசனுக்கு ஃபிளெக்ஸ்கள் பளிச்சிட்டன. வழக்கமாக இந்த விழாவுக்கு ரகசியமாக வரும் அ.தி.மு.க-வினர் இந்த ஆண்டு கரைவேட்டியில் பங்கேற்றார்கள். தஞ்சை எம்.பி பரசுராமன், எம்.எல்.ஏ ரெங்கசாமி ஆகியோர் வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மட்டும் மிஸ்ஸிங்.

விழாவின் ஹைலைட், திவாகரன் பேச்சு. ‘‘அரசியல் களம் கொந்தளிக்கிறது, ஜனவரியில் அரசாங்கம் மாறிவிடும், கேபினட் அமைத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். அதையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு அம்மாவின் ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இங்கே வந்திருக்கும் நீங்களெல்லாம் பங்களித்தவர்கள், பங்களிப்பவர்கள், பங்களிக்கப் போகிறவர்கள். அ.தி.மு.க சரித்திரத்தில், தஞ்சைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. புரட்சித் தலைவர் இந்தக் கட்சியை தொடங்கும்போது, இந்தப் பகுதியில் மிகப் பெரிய பங்காற்றியவர் அண்ணன் எஸ்.டி.எஸ். அதை யாரும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. நன்றியை மறந்தால் அது உண்மையான தமிழனுக்கு அழகல்ல. அ.தி.மு.க முதன்முதலில் களமிறங்கிய திண்டுக்கல் இடைத்தேர்தலை ஒரத்தநாடு, மன்னார்குடி தொண்டர்களை வைத்துத்தான் நடத்தினார் எஸ்.டி.எஸ். ஆகையால், நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.

“இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்!” - திவாகரன் ஸ்டேட்மென்ட்

அ.தி.மு.க-வின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் எங்கள் பங்கு இருக்கிறது. 

இப்போதும், ‘எப்படியும் உடைத்துவிடலாம், ஏதாவது பண்ணிடலாம்’ என சதிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அப்படி எது நடந்தாலும் எங்கள் சடலத்தின் மீதுதான் நடக்கும். புரட்சித்தலைவருக்குப் பிறகு அ.தி.மு.க-வைக் கட்டிக்காத்ததில் மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு, அதுவும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தினருக்கு உண்டு. அதில் மிக முக்கியமான பங்கு முனைவர் ம.நடராசனுக்கு உண்டு. அதை மற்றவர்கள் வேண்டுமானால் மறந்துவிடலாம், ஆனால், நான் மறக்கமாட்டேன். 

எங்கள் உயிருக்கு மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது. அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியைக் கைப்பற்றினோம். அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜா. அணி, ஜெ. அணி இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரட்டை இலையை மீட்டு எடுத்த பெருமை முனைவர் ம.நடராசனுக்கு உண்டு. இப்போதைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.  

தலைவர் வளர்த்த கழகம், அம்மா ஆசைப்படி இ்தை நூற்றாண்டுகளுக்கு மேல் வழிநடத்த வேண்டும். நமக்குக் கடுமையான காலகட்டம் இது. அ.தி.மு.க-வுக்கும் பொதுச்செயலாளருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் நிறைய மிரட்டல்கள் இருக்கின்றன. நாம்தான் எப்போதும் போல, அ.தி.மு.க-வை இப்போதும் காக்க வேண்டும். 

இந்தியாவை ஆள்வதற்கு ஒரு முகர்ஜியோ, குப்தாவோதான் வருகிறார்கள். 40 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் இருக்கிறோம். புயல் அடித்து ஒரு வாரம் கழித்துத்தான் மத்தியக் குழுவினர் வருகிறார்கள். காவிரிப் பிரச்னையில் 360 டிகிரி உல்டா அடித்து பிரதமர் பின்வாங்குகிறார். ஜல்லிக்கட்டை அனுமதித்தால் அரசாங்கத்தைக் கலைத்துவிடுவோம் என்கிறார்கள். அநியாயம் நடந்துகொண்டிருக்கிறது. நாம்தான் ஒற்றுமையுடன் இருந்து வேரறுக்க வேண்டும்’’ என்றார்.

“இரட்டை இலையை மீட்டவர் ம.நடராசன்!” - திவாகரன் ஸ்டேட்மென்ட்

‘‘அடுத்தவர் வந்து அதிகாரம் செய்ய விடமாட்டோம்!’’ 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார் ம.நடராசன். சென்னை புத்தகக் காட்சியில் `தமிழ் மண்’ பதிப்பகம் இளவழகனார் வெளியிட்ட ‘மறைமலையம்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியோடு எம்.நடராசனும் சேர்ந்து மேடையேறினார். கி.வீரமணி முதலில் அரசியலைத் தொட்டு பேசினார். ‘‘தமிழனுக்கு இது போதாத காலம். தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் மத்திய அரசு வஞ்சனை செய்கிறது. டெல்லியில் இருக்கும் அவர்கள், தமிழர்களை அடிமை என்று நினைக்கிறார்கள். நமக்கு வருமானம் முக்கியமல்ல; தன்மானம்தான் முக்கியம். ஆட்சியைப் பற்றிக் கவலை இல்லை. மீட்சியைப் பற்றிக் கவலைப்படுகிறோம்’’ என்று ஆவேசமாகப் பேசி அமர்ந்தார்.

அவரை அடுத்து மைக் பிடித்த ம.நடராசன், ‘‘தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எப்போதும் நெருக்கடி வராது. நாலாபுறமும் நம்மைச் சுற்றி வல்லூறுகள் வட்டமடிக்கின்றன. தமிழர்களின் தலைவர்கள் எல்லோரும் வீழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; மறைந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, இதுதான் தக்க தருணம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அடுத்தவர் வந்து நம்மை அதிகாரம் செய்ய ஒருநாளும் விடமாட்டோம்’’ என்று படபடவென்று பேசி முடித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...