News
Loading...

தமிழர் அல்லாத காவல் துறை அதிகாரிகள்தான் இதற்குக் காரணம்! - கொதிக்கிறார் வேல்முருகன்

தமிழர் அல்லாத காவல் துறை அதிகாரிகள்தான் இதற்குக் காரணம்! - கொதிக்கிறார் வேல்முருகன்

ல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களையும் பொதுமக்களையும் அடித்துத் துவைத்தது, வீடுகளையும் உடைமைகளையும் அடித்து நொறுக்கியது, வாகனங்களுக்குத் தீ வைத்தது என்று தமிழகப் போலீஸார் நிகழ்த்திய அத்துமீறல்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் வீடியோக்கள் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. இந்த நிலையில், தமிழகப் போலீஸாரின் அடாவடிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான பண்ருட்டி வேல்முருகனை சந்தித்தோம்...

‘‘முதல்வரை சரியாக வழிநடத்தாத அதிகாரிகளும், காவல்துறையை சரியாக வழிநடத்த இயலாத உயர் அதிகாரிகளும்தான் நடந்துமுடிந்த இத்தனை அநியாயங்களுக்கும் காரணம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்திய இளைஞர்களிடையே ஜல்லிக்கட்டு சட்டத்தைப் பற்றி விளக்கிப் பேச வைத்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யவில்லை.

முதல்வருக்கு நெருக்கமாக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தமிழர்களாக இல்லாததே இத்தகையப் பிரச்னைகளுக்குக் காரணம். தமிழர்களின் கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, தமிழர் உணர்வு என்று எதுவுமே இவர்களுக்குத் தெரியவில்லை.

மதுரையில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களை அடித்து நொறுக்கியுள்ளார் போலீஸ் எஸ்.பி விஜயேந்திர பிதாரி. வீரத் தமிழர்களின் உணர்வுகள் அவருக்குப் புரியவே இல்லை. சென்னையில் அமைதியாக நடந்த இளைஞர் புரட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கலந்துகொண்டு சென்றுள்ளனர். அப்போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், கூட்டத்துக்குள் போலீஸ் புகுந்ததுதான் விபரீதங்களுக்குக் காரணம் இளைஞர்களின் இந்த எழுச்சிப் பயணத்தை காவல் துறை சரியாகக் கையாளவில்லை. கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றில் மிதித்து உதைத்த போலீஸார், இளம்பெண் ஒருவரை அரை நிர்வாணம் ஆக்கி இருக்கிறார்கள். உயிருக்குப் பயந்து மீனவக் குப்பங்களில் புகுந்த இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்துக்காக, மீனவ மக்களை வீடு புகுந்து வெறியோடு தாக்கியிருக்கிறார்கள். அவர்களின் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு, அவற்றை தீ வைத்து எரித்துள்ளனர். மீனவ மக்களுக்கும் அந்தப் பகுதியில் இருந்த போலீஸ் குடியிருப்புகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த வன்மத்தை வைத்து, போலீஸார் இப்போது பழிவாங்கிவிட்டனர். இப்படிப்பட்ட கொடூர போலீஸைத்தான் ‘உங்கள் நண்பன்’ என்று போலீஸ் கமிஷனர் கூறுகிறார். இவரை உடனே மாற்ற வேண்டும்.

அமைதியாகப் போராடத் தொடங்கிய மதுரை மக்கள் மீது விஜயேந்திர பிதாரி தாக்குதல் நடத்தி விபரீதத்தைத் தொடங்கி வைத்தார். சென்னையில் அமைதியாகப் போராடி வந்து, 23-ம் தேதி கலையத் தயாராக இருந்தவர்கள் மீது அராஜகத் தாக்குதல் நடத்தி உள்ளார் ஜார்ஜ். 

தமிழும் தெரியாத, தமிழர்களின் பண்பாடும் தெரியாதவர்களை எல்லாம் அதிகாரம் செய்ய விட்டால் இதுதான் நடக்கும். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆவேச அனல் கக்கினார் வேல்முருகன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்