News
Loading...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தொடர் போராட்டங்களுக்கு சிங்கம் சூர்யா ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தொடர் போராட்டங்களுக்கு சிங்கம் சூர்யா ஆதரவு

ல்லிக்கட்டு பிரச்சினை தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்சினைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள். 

தன்னெழுச்சியான போராட்டங்களின் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள் ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 

சட்டமும் ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன். 

மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும் இதேபோல் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்