News
Loading...

முதல்வராக 19-ம் தேதி பதவியேற்க சசிகலா திட்டம்?

முதல்வராக 19-ம் தேதி பதவியேற்க சசிகலா திட்டம்?

திமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக வரும் 19-ம் தேதி பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் சசிகலாவை சந்தித்து, அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என வலியுறுத்தினர். அதை ஏற்று கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 31-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் முறைப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்டு கட்சிப் பணியைத் தொடங்கினார். அப்போது முதல்முறையாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜெயலலிதாவைப் போல ராணுவக் கட்டுப்பாட்டோடு அதிமுகவை வழிநடத்துவோம் என்றார்.

ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒருவரிடம் இருப்பதே தமிழகத்துக்கு நல்லது. எனவே, சசிகலா விரைவில் முதல்வராக பதவியேற்க வேண்டும் என மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை பகிரங்க அறிக்கை வெளியிட்டார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், மூத்த அமைச்சர்களும் சசிகலா முதல்வராக வேண்டும் என வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளராகப் பதவியேற்ற சசிகலா, கடந்த 4 ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். அதிமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், திரைப்படத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தினமும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 19-ம் தேதி சசிகலா முதல்வராக பதவியேற்க இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் இல்லாததால் ஜனவரி 26-ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தின விழாவில், முதல்வர்தான் தேசியக் கொடியேற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே, அதற்கு முன்பாக சசிகலா முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியானது.

சட்டப்பேரவை வரும் 23-ம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்ற உள்ளார். மறுநாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, அந்தத் தருணத்தில் முதல்வராக சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாகவும் எனவே, 19-ம் தேதி பதவியேற்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டப்பேரவை வரும் 23-ம் தேதி கூடுகிறது. மறுநாள் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே அத்தருணத்தில் முதல்வராக இருக்க சசிகலா விரும்புவதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்