News
Loading...

கடற்கரைக்குச் செல்லுங்கள்... உங்களோடு நானும் வருகிறேன்! - அழைத்த கமல்... மறுத்த பன்னீர்!

‘‘கடற்கரைக்குச் செல்லுங்கள்... உங்களோடு நானும் வருகிறேன்!” - அழைத்த கமல்... மறுத்த பன்னீர்!

கிம்சை வழியில் போராடிய இளைஞர்களை அராஜக மாக வெளியேற்றிய காவல் துறைக்கு எதிராகத் துணிச்சலாகப் பேச முன்வந்தவர் நடிகர் கமல் மட்டும்தான். கமல் பேட்டி தருகிறார் என்றதும் அவர், அரசுக்கும் போலீஸுக்கும் எதிராக என்ன பேசப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள மேலிடத்தில் துடித்தார்கள். ‘கமல் பேட்டிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்’ என்று மீடியாக்களுக்கு ரகசிய உத்தரவு போனது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கமல் பேசினார். ‘‘நான் நடிகனாக அல்ல, தமிழனாகப் பேசுகிறேன்” என்றார் கமல். இந்த நிலையில், அவருக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கொந்தளிக்க ஆரம்பித்து இருப்பதும் சூட்டை அதிகமாக்கி வருகிறது.

முதல்வரிடம் பேசிய கமல்!

ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவுக் கருத்தைச் சொல்லி வருபவர் கமல். ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ விழாவில் பகிரங்கமாகவே, “மக்களுக்காகத்தான் சட்டங்கள். மக்களுக்கு விரோதமான சட்டங்களை மாற்ற வேண்டும்” என்று அவர் பேசினார். ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கச்சொல்லி மெரினாவில் மாணவர்கள் அணி திரண்டபோது, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச்சென்ற நடிகர்களை வர வேண்டாம் என்று மறுதலித்து அனுப்பினார்கள். தொடர்ந்து நடிகர் சங்கம் போராட்டம் அறிவித்தபோது, ‘மாணவர்கள் போராட்டத்துக்கான வெற்றி ஒளியை அவர்கள் மட்டுமே பெறட்டும். நடிகர்கள் யாரும் அந்த ஒளியைப் பெற வேண்டாம்’ என்று சொன்னவர் கமல்ஹாசன். மாணவர்கள் போராட்டம் குறித்து ஒவ்வொரு சேனல்களும் வெவ்வேறு கருத்தைப் பிரதிபலித்தன. அப்போதும், ‘‘தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் இருக்கிறது. அதில் வருவதை மாணவர்கள் நம்ப வேண்டாம். நீங்களே உங்களுக்குள் உண்மைச் செய்தியை பரிமாறிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

மாணவர் போராட்டம் தீவிரமானபோது முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு போன் செய்த கமல், ‘‘நீங்கள் அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாகச் சொல்கிறீர்கள். இதை நேரில் சென்று மாணவர்களுக்கு விளக்குங்கள். அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று சொல்லி உள்ளார். ‘‘நான் போனால் பிரச்னை செய்வார்கள். எதிர்ப்பு தெரிவிப்பார்கள்” என்று பன்னீர் சொல்லி இருக்கிறார். ‘‘நானும் உங்களோடு வருகிறேன். மாணவர்கள் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்” என்று கமல் சொல்ல, அதைப் பன்னீர் ஏற்கவில்லை. பிறகு போலீஸார் தாக்குதலில் இறங்கி வன்முறை வெடித்தது. இந்த நிலையில் கமல் தனது கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘முதல்வர் பன்னீர்செல்வம், ‘அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நானே முன்நின்று நடத்தப் போகிறேன்’  என்று சொல்லிவிட்டு போனபோதே  ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று எனக்குப் பயமாக இருந்தது. ஏனென்றால், சாதாரண சூழ்நிலையில் ‘விருமாண்டி’ படத்தை அலங்காநல்லூரில் படமாக்க எண்ணியபோது அங்கே படப்பிடிப்பு நடத்த அப்போதே அனுமதி தரவில்லை. அலங்காநல்லூரை அப்படியே சென்னையில் செட்போட்டு படமாக்கினோம். நான் உண்மையிலேயே திமில் பிடித்து ஏறுதழுவியவன். அலங்காநல்லூரில் இருந்து  சென்னைக்குத் திரும்பிய முதல்வர், மெரினாவில் இருக்கும் மாணவர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். ‘நாங்கள் ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றிவிட்டு அதன்பின் பார்க்கிறேன்’ என்று அவர்கள் சொன்னபோதும் எனக்குச் சரியென்றே தோன்றியது. அதற்குள் இப்படி ஒரு விபத்து நடந்துவிட்டது.

மெரினாவில் போராடியவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். நான் சினிமாவை படித்துவரும் மாணவன். நான் அரசியலை வெளியில் இருந்து வேடிக்கைப் பார்க்கும் பாமரன். அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆசைகளை மட்டுமே சொல்பவன். அதற்காக என்னால் அரசியல்வாதியாக நிகழ்த்திக்காட்ட முடியாது. உணவு சுவையாக இருக்கிறது... சரியில்லை என்று கருத்து மட்டுமே என்னால் சொல்ல முடியும்.  அதற்காக சமையல்காரனாக என்னால் முடியாது. 
பத்திரிகையாளர்கள் எல்லோரும் ஏதோ செய்தி எழுதுவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் சரித்திரத்தை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் சரித்திரம் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஓர் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிகழ்வைப் பார்க்கும்போது நான் கேலிக்குரியவனாக ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

கடற்கரை சாலையில் தினசரி நடக்கும் விபத்துகளில் நான்கு நாய்களின் உயிர்கள் பலியாகின்றன அதற்காக அந்த வழியாக பயணமே செல்லக்கூடாது என்று பீட்டா அமைப்பு தடுத்து நிறுத்துமா? மாட்டு இறைச்சிக்காக 10,000 மாடுகளைக்கொன்று அந்த இறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதிச் செய்தால் அதை நியாயம் என்று  பீட்டா சொல்கிறது. ஜல்லிக்கட்டில் ஒரு காளை மாட்டோடு பத்துப்பேர் விளையாடினால் அது அநியாயம் என்று பீட்டா தடுக்கிறது. இரட்டை வேடம் போட்டு, இரண்டு முகங்களை பீட்டா காட்டுவது எதற்காக?” என்று பொங்கித்தீர்த்தார் கமல்.

உடனே கமல் அரசியலுக்கு வரப்போகிறார், அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்ற செய்திகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. ‘‘நான் நடிகன் மட்டுமல்ல, தமிழன். தமிழன் மட்டுமல்ல, மனிதன். அதனால் என் கருத்தைச் சொல்வேன். இப்போது மட்டுமல்ல, இனி தொடர்ந்து சொல்வேன்” என்று சொன்னாராம் கமல். ‘‘நான் அரசியல்கட்சியைத் தொடங்கமாட்டேன். வாக்கு கேட்டு வரமாட்டேன். ஆனால் அரசியல் பேசுவேன்” என்றும் சொல்லி வருகிறாராம் கமல்.

குரல் கொடுங்க கமல்!

‘‘கடற்கரைக்குச் செல்லுங்கள்... உங்களோடு நானும் வருகிறேன்!” - அழைத்த கமல்... மறுத்த பன்னீர்!

தமிழ்ப் பொறுக்கி vs டெல்லி பொறுக்கி! 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் நடந்த இளைஞர் புரட்சியை இந்தியாவே கண்டு மெச்சியது. தமிழகப் புரட்சியை அசாமும், கர்நாடகாவும் முன்னுதாரணமாகக் கொண்டு எருது போட்டிக்கு அனுமதிக் கேட்டு போராடத் தயாராகி வருகின்றன. ஆனால், தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட பி.ஜே.பி-யைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிபோல ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த யாராலும் முடியாது.

தமிழர்களைப் ‘பொறுக்கிகள்’ என்றும், ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும்’ என்றும் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். பதிலுக்கு, நடிகர் கமல்ஹாசன் போட்ட ட்விட்டுகள் அதிரடி ரகம்.

தமிழர்களைப் பொறுக்கிகள் என சுவாமி ட்விட் போட்டுவந்த நிலையில், ஒரு விழாவில் பேசிய கமல், ‘‘ஒருத்தர் ‘தமிழ்ப் பொறுக்கிகள்’ என கூறிவருகிறார். நான் ஒரு தமிழ்ப் பொறுக்கிதான். ஆனால், டெல்லியில் பொறுக்க மாட்டேன். இது அரசியல் அல்ல; தன்மானம்’’ என சுவாமிக்குப் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தடியடி நடத்தியதை விமர்சித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட் போட்டதுடன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.

‘‘போராட்டம் நடைபெற்றபோது பொதுமக்களை முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் வேலையைப் போலீஸ் செய்யாமல் இருந்திருந்தாலே இவ்வளவு பாதிப்பு நடந்திருக்காது’’ எனச் செய்தியாளர்கள் மத்தியில் கமல் கூறினார். அத்துடன் ஆட்டோக்களை போலீஸார் எரிக்கும் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துக் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், ‘‘போராட்டக்காரர்களைத் தமிழக முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என சினிமாவாலா கமல்ஹாசன் முட்டாள்தனமான கருத்துகளைக் கூறுகிறார். மதுரையில் மக்களைச் சந்திக்க முயற்சித்த முதல்வருக்கு என்ன நடந்தது?’’ என கமலை விமர்சித்து ட்விட் போட்டிருந்தார் சுவாமி. இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட் போட்ட கமல், ‘‘ஹாய் சுவாமி. நான் தமிழ்வாலா. முதல்வர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ் சீஸரும்கூட மக்களிடம் பணிவாகத்தான் இருந்தார்கள். அப்படியிருக்கை யில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்கக்கூடாது?’’ என்றார்.

ஜல்லிக்கட்டுத் தொடர்பாக கமல்ஹாசனுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் ட்விட்டர் சண்டை முற்றிவந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென கமலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், கமலைச் சமாதானப்படுத்தவே அவரைப் பொன்னார் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.