News
Loading...

கட்சிகளின் கஜானாவில் கறுப்புப் பணம்!

கட்சிகளின் கஜானாவில் கறுப்புப் பணம்!

ட்டுக்குப் பணம் கொடுப்பது தவிர்க்க முடியாத சம்பிரதாயம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், கரன்சி இல்லாமல் கட்சி நடத்துவது சாத்தியம் இல்லை. கட்சிக்கு அலுவலகம் கட்டுவதில் தொடங்கி, தலைவர்கள் ஊர் ஊராக நிகழ்ச்சிகளுக்குச் செல்வது வரை எல்லாவற்றுக்கும் நன்கொடை வசூல்செய்தே கட்சிகள் செலவழிக்கின்றன.

இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? இதைத்தான் யாரும் முழுமையாக வெளியில் சொல்வது இல்லை. ‘மக்கள் சேவை’ செய்யும் அமைப்புகள் என்பதால், அரசியல் கட்சிகள் எதுவும் வருமான வரி கட்டத் தேவையில்லை. இதோடு இன்னும் ஏராளமான சலுகைகளும் கட்சிகளுக்குத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியும், தாங்கள் வசூலிக்கும் நன்கொடைகளை யார் கொடுத்தார்கள் என்பதை தேர்தல் ஆணையத்துக்குச் சொல்ல வேண்டும். ஆனால், ரூ.20 ஆயிரத்துக்கும் கீழே இருக்கும் ‘சிறிய’ தொகைகளை யார் கொடுத்தார்கள் என சொல்லத் தேவையில்லை.

இந்த ‘சைக்கிள் கேப்’பில்தான் எல்லாக் கட்சிகளும் புகுந்து வருகின்றன. தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அள்ளித்தரத் தயாராக இருக்கும் பலரின் பணத்தை, ஏதேதோ கற்பனைப் பெயர்களில் கணக்கு எழுதி வரவு வைக்கின்றன. கோடிகளில் கொடுத்தாலும், அதை 20 ஆயிரத்துக்கும் கீழே இருக்கும் தொகையாகப் பிரித்துப் பிரித்துக் கணக்கு காட்டுகின்றன.

Association for Democratic Reforms என்ற அமைப்பு, 2004-05 நிதியாண்டு முதல் 2014-15 வரையிலான 11 ஆண்டுகளில் கட்சிகள் வாங்கிய நன்கொடைகளை ஆய்வு செய்தது. இந்தக் காலத்தில் ஆறு தேசியக் கட்சிகளும், 51 மாநிலக் கட்சிகளும் பெற்ற நன்கொடை, ரூ.11,367 கோடி. இதில் ரூ.1,836 கோடி மட்டுமே, யார் கொடுத்தது என்ற விவரங்களோடு இருக்கிறது. அதாவது, வெறும் 16 சதவிகிதம். இதுதவிர, சொத்துக்களை விற்றது, உறுப்பினர் கட்டணம், புத்தக விற்பனை போன்றவை மூலம் வந்த வருமானமாகக் கணக்கில் காட்டப்பட்டது, ரூ.1,699 கோடி. இது மொத்த வருமானத்தில் 15 சதவிகிதம். மீதி ரூ.7,832 கோடி, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வந்தது. அதாவது, கிட்டத்தட்ட 69 சதவிகித வருமானத்தின் ஆதாரங்களைக் கட்சிகள் காட்ட மறுக்கின்றன. இது கறுப்புப் பணமா? யார் கொடுத்தார்கள்? எதற்காகக் கொடுத்தார்கள்? என்ன ஆதாயத்தை எதிர்பார்த்துக் கொடுத்தார்கள்..? எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

இதில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது, வழக்கம் போல காங்கிரஸும் பி.ஜே.பி-யும்தான். காங்கிரஸின் நன்கொடையில் 83 சதவிகிதமும், பி.ஜே.பி-யின் நன்கொடையில் 65 சதவிகிதமும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்பட்டவை. மாநிலக் கட்சிகளில் கடந்த 11 ஆண்டுகளில் அதிகம் நன்கொடை பெற்றது, சமாஜ்வாடி கட்சி. உ.பி பெரிய மாநிலம் என்பதால் இது நியாயமாக இருக்கலாம். ஆனால், இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருப்பவை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும்தான்! இதில் தி.மு.க ஒரு தனிப்பெருமை பெறுகிறது. அதாவது, ‘நன்கொடை கொடுத்தவர்கள் பெயரோடு’ அந்தக் கட்சி ரூ.129.83 கோடியை கணக்கில் காட்டியுள்ளது. இந்த வகையில், மாநிலக் கட்சிகளில் முதலிடம் அதற்குத்தான். 

‘’அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவை என மத்திய தகவல் ஆணையம் கடந்த 2013-ம் ஆண்டில் சொன்னது. ஆனால், இதைப் பல கட்சிகளும் ஏற்கவில்லை. கட்சிகளின் நன்கொடை வசூல் விஷயத்தில் வெளிப்படைத்தன்மை வர வேண்டும். அப்போதுதான், கறுப்புப் பணம் அரசியலில் புழங்கும் நிலை மாறும். தேர்தல்களும் ஆரோக்கியமாக நடைபெறும்’’ என்கிறது Association for Democratic Reforms.

அது எப்போது நடக்கும்?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...