News
Loading...

விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

மிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 3 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், நேற்று அதற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

உயர் கல்விக்கு முக்கியத்துவம்

உயர் கல்வி கற்பதன் மூலம் மாணாக்கர்கள் வேலைவாய்ப்பு பெறவும், சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், உயர் கல்விக்கு தமிழ்நாடு அரசு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 5½ ஆண்டு கால மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் 4 புதிய அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், 44 அரசு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 64 கல்லூரிகளை புதிதாகத் தொடங்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

அதுமட்டுமின்றி இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவற்றை ஏற்படுத்தியதுடன், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாகவும் ஜெயலலிதாவே காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரணமாக, 2010–ம் ஆண்டு 6.10 லட்சம் என இருந்த உயர்கல்வி மாணாக்கர்களின் சேர்க்கை, இந்த ஆண்டு 7.20 லட்சம் என உயர்ந்துள்ளது.

தொடர்ந்து முன்னிலை

கடந்த 5½ ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகள் 959 கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக செலவிடப்பட்ட தொகை 687.35 கோடி ரூபாய் ஆகும். கடந்த 5½ ஆண்டுகளில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 331 முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு பயிற்சி கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சுய நிதிக் கல்லூரிகளில் பயிலும் 6 லட்சத்து 53 ஆயிரத்து 864 ஆதி திராவிட, பழங்குடியின மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணங்களை அரசே ஏற்று வழங்கியுள்ளது.

இப்படி அடுக்கடுக்கான திட்டங்களை செயல்படுத்தியதால் தான், உயர் கல்வியை பொறுத்தவரை, தமிழ்நாடு இந்தியாவிலேயே இன்று முதலிடத்தில் உள்ளது. அகில இந்திய அளவில் உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 23.6 சதவீதம் என்று உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது 44.8 சதவீதமாக உள்ளது என்பதை பெருமையுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உயர் கல்வியில் நாம் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு மானியம்

கடந்த 5½ ஆண்டுகளில் 1,83,251 விவசாயிகளுக்கு 1,000 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை சீர் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவும், மொத்தம் 585.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட 34,206.13 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட 54,747 விவசாயிகளுக்கு, 44.82 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட 6,836.43 ஹெக்டேர் தோட்டப் பயிர் பாதிப்பிற்கு, 14,502 பயனாளிகளுக்கு 10.63 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. 15,103 மீனவர்களுக்கு சேதங்களுக்கான 16 கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு இதுவரை மொத்தம் 498 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இழப்பீடு தொகை

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வறட்சி நிவாரணமாக 39,565 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கையை நான் பிரதமரை 19–1–2017 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதன்படி, இங்குள்ள வறட்சி நிலைமைகளை நேரில் பார்த்து, பரிந்துரை செய்திட, மத்திய அரசு, குழு ஒன்றை 23–1–2017 முதல் 25–1–2017 வரை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. அந்தக் குழு தனது ஆய்வை முடித்துள்ளது. மத்திய அரசுக்கு, அந்தக்குழு விரைவில் அறிக்கையை அளித்து, அதன் அடிப்படையில் நமக்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

அதே சமயம், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்கள் புல எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது கூடிய விரைவில் முடிக்கப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டினை ஒரே சமயத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

நியாயமான தீர்ப்பு

தமிழ்நாட்டில் தற்போது 1,549 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர 680 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், வருகின்ற 5 ஆண்டுகளில் கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் நிலையங்கள் நிறுவிட ஏதுவாக மாற்று ஏல முறை மூலம் முதற்கட்டமாக 500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டது. மற்றுமொரு 500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய அதிகபட்ச விலையாக யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 50 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10–2–2017 அன்று அந்த ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படவுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் 5,700 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்திடவும், நமக்குரிய தண்ணீரை, கர்நாடக அரசிடம் இருந்து பெற்றிடும் வகையிலும் சுப்ரீம் கோர்ட்டில், நியாயமான தீர்ப்பை நாம் பெற்றிட முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

அமைதிப்பூங்கா

காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையில், மேகதாது உள்ளிட்ட எந்த ஒரு அணை கட்டும் திட்டத்தையும் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு சட்டப்பூர்வமாக உறுதியுடன் தடுத்து நிறுத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழை, எளியோர் நலம் காண ஜெயலலிதா செயல்படுத்திய அற்புதமான நலத் திட்டங்கள், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும், ஜெயலலிதாவின் இந்த திட்டங்கள் அனைத்தையும், எவ்வித தொய்வும் இன்றி, இன்னும் சிறப்புடன் செயல்படுத்துவோம் என்பதையும், இப்பேரவைக்கு மிகவும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

குடிமராமத்து திட்டம்

நீர்வள ஆதாரத்தைப் பெருக்குவது என்பது, மிகவும் முதன்மையான பணி என்பதை, நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான், குடிமராமத்து முறையைப் புதுப்பிக்க, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதன்படி அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின்படி, பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், பாசன அமைப்புகள் 10 சதவீத பங்களிப்பினை, பொருளாகவோ, அல்லது மனித ஆற்றலாகவோ வழங்க முன்வந்தால், 10 லட்சம் ரூபாய் வரையான திட்டப்பணிகளுக்கு, நிதி உதவி வழங்கி, அவர்களே அப்பணியைச் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆறுகளை சுத்தம் செய்தல், குளங்களை சீரமைத்தல், கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பல்வேறு நீர்நிலைகளை இத்திட்டத்தின் மூலம் சீரமைக்கலாம்.

இத்திட்டத்தினைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பொதுமக்களும், அமைப்புகளும், மாவட்ட கலெக்டரை அணுகி, இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி, பொதுமக்களும், மாவட்ட கலெக்டரை அணுகி தங்களை இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புதுமையான வாய்ப்புகள்

2017 மார்ச் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி, அடுத்த ஆண்டு, 300 கோடி ரூபாயாக உயர்த்தப்படும், அது படிப்படியாக மேலும் உயர்த்தப்பட்டு, அடுத்த ஓரிரு ஆண்டுகளில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எவ்வளவோ கருத்துகள் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த உரை கண்ணுக்குத் தெரியாத கானல் நீர் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் இதை கானல் நீர் என்பது இது ஒரு காட்சிப் பிழை என்றே கருதுகிறேன். கவர்னர் உரையில் தெரிவித்துள்ளவாறு, புதிய வழிகளையும், புதுமையான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...