News
Loading...

ஜெயலலிதா பாணியில் கலக்கினார் தீபா

ஜெயலலிதா பாணியில் கலக்கினார் தீபா

றைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.

தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க.வினர் தீபாவை பார்ப்பதற்காக சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தீபா அரசியல் களத்தில் குதித்தார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ந்தேதி அன்று இது தொடர்பான அறிவிப்பை தீபா வெளியிட்டார்.

மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் எனது அரசியல் பயணம் இருக்கும் என்று தெரிவித்த தீபா, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

அப்போது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப செயல்பட உள்ளதாகவும், எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து தனது வீட்டு முன்பு கூடும் தொண்டர்களை சந்திப்பதை தீபா வழக்கமாகவே வைத்துள்ளார்.

இந்நிலையில் அண்ணா நினைவு நாளான நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தீபா, ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா சுற்றுப்பயணம் செய்து ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் முதியோர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரது செயல்பாடுகள் ஜெயலலிதா பாணியில் இருந்தது.

தண்டையார்பேட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்ற தீபா, வயதான பெண்களிடம் நலம் விசாரித்தார். அப்போது அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றார். அங்கு அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளிக்கும், இரட்டை குழி தெருவில் உள்ள பார்வையற்றோர் இல்லத்துக்கும் சென்று தீபா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று 3 இடங்களுக்கு சென்று நலத்திட்டங்களை வழங்கிய தீபாவை பார்ப்பதற்காக அவரது ஆதரவாளர்களும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களும் திரண்டனர்.

தீபாவின் நடை-உடை-பாவனைகளும் ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போலவே இருந்தன. தீபாவின் திடீர் சுற்றுப்பயணத்தால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்றும், ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவேன் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்