News
Loading...

அதிகாரிகள் மீது புகார் கூறிய ராணுவ வீரர் மர்மச்சாவு

அதிகாரிகள் மீது புகார் கூறிய ராணுவ வீரர் மர்மச்சாவு; தற்கொலை செய்துக்கொண்டார் - ராணுவம்

ராணுவ அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் வீரர்களை நடத்தும் விதத்தை செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஸ்டிங் ஆபரேஷன் எனப்படும் ரகசிய நடவடிக்கை மூலம் பதிவு செய்தது. அப்போது அதிகாரிகளால் தாங்கள் படும் வேதனைகளை கேரளாவை சேர்ந்த ராய் மேத்யூ என்ற வீரர் செய்தியாளரிடம் விளக்கினார். எனினும் அவரது முகம் துணியால் மறைக்கப்பட்டு இருந்தது.

மேலும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, அவர்களது நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவதும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

 இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த ஸ்டிங் ஆபரேஷன் குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ராணுவ வீரர் ராய் மேத்யூ கடந்த 25-ந்தேதி மாயமானார். அவரை சக வீரர்கள் தேடி வந்த நிலையில், மும்பை அருகே நாசிக்கின் தியோலாலி கண்டோன்மென்டில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகும் என கருதப்படுகிறது.

ராய் மேத்யூ கடைசியாக கடந்த 25-ந்தேதி கொல்லம் மாவட்டம் எழுகோனில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.

 தான் கூறியவை அனைத்தும் பதிவு செய்யப்படாது என்ற உத்தரவாதத்தின் பேரில்தான் அந்த பேட்டி கொடுத்ததாகவும், ஆனால் அந்த வீடியோ பதிவு வெளியானதால் அதிர்ச்சியடைந்ததாக கூறியதாகவும் அவரது உறவினர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் தனது பணி போகும் எனவும், மேலும் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்ததாக தெரிகிறது. அவரது மர்மச்சாவு குறித்து தியோலாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர் மனதளவில் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் நிலையில் ராணுவ வீரர் தற்கொலை செய்துக் கொண்டார் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 25-ம் தேதி உயர் அதிகாரியிடம் மன்னிப்பு கோரி எஸ்.எம்.எஸ். அனுப்பிய பின்னர் அவர் காணாமல் போய் உள்ளார் என்றும் மிகவும் மன அழுத்தத்தில் இருந்த போதுதான் அவருடைய மனைவிடம் பேசிஉள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...