News
Loading...

இந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணுக்கு எதிர்ப்பு

இந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணுக்கு எதிர்ப்பு

பெங்களூரு:கர்நாடகாவில், தனியார், 'டிவி' சேனலில், இந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், கடுமையாக விமர்சனம் செய்து பதிவுகள் வெளியாகி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகாவில், தனியார், 'டிவி' சேனலில், சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும், 'ரியாலிட்டி ஷோ' நடந்தது; இதில், 22 வயதான, சுஹானா சயீது என்ற பெண் பங்கேற்றார். அவர் பாடும்போது, நடுவர்கள் கண்களை துணியால் கட்டிய நிலையில், காதால் கேட்டு மகிழ்ந்தனர். இனிய குரலில், இந்து மத பாடலை பாடி முடித்த பின், கண் கட்டை அவிழ்த்து பேசிய நடுவர்கள், சுஹானாவின் குரலை, வாயாரப் புகழ்ந்து தள்ளினர். 

அவருக்கு மிக இனிமையான குரல் வளம் இருப்பதாகவும், சிறப்பான நிலைகளை அவர் எட்ட முடியும் என்றும், நடுவர்கள் கூறினர். அந்த நிகழ்ச்சியால், சுஹானாவுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், 46 ஆயிரம் பேர் பின்பற்றி வரும், 'பேஸ்புக்' முகநுால் குழு பக்கம் ஒன்றில், அவரை, காரசாரமாக விமர்சித்து, பதிவு வெளியாகி இருந்தது. 

'பொது வெளியில் வேறு மத பாடலை பாடியதோடு, ஆண்கள் மத்தியில் பாடி, தன் உடலை வெளிக்காட்டிய சுஹானாவின் பெற்றோர் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள். இனி, சுஹானா, 'ஹிஜாப்' எனப்படும் புனித ஆடையை அணியக்கூடாது. அதன் புனிதத்தன்மையை, அவருக்கு மதிக்கத் தெரியவில்லை' என, அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 

அந்த பதிவின் கீழ், சிலர், சுஹானாவை விமர்சனம் செய்தபோதும், பலர், அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை இட்டுள்ளனர். 'இஸ்லாம், அனைத்து மதங்களையும், மனிதர்களையும், மதிக்க கற்றுக் கொடுத்துள்ளது; நாம் ஏன், ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?' என, பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...