News
Loading...

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் விபத்துகளில் சிக்கும் மர்மம்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் விபத்துகளில் சிக்கும் மர்மம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர் சேலத்தில் விபத்தில் பலியான நிலையில், அவரது நண்பர் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வருகிறார். அவரது மனைவி, குழந்தை உயிரிழந்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சொந்தமான நீலகிரி கோடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம்பகதூர்(51) என்பவர் கடந்த 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர்(37) படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் வாகன நம்பர் பிளேட்கள், கையுறைகள் உள்ளிட்ட சில தடயங்களை போலீஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் 2 கார்களில் கோடநாடு எஸ்டேட் பங்காளாவுக்கு ஒரு கும்பல் வந்து சென்றதாக சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சூரைச் சேர்ந்த ஜித்தின், பிஜின், சதீசன் உள்ளிட்ட 8 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கோடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபரான சேலம், எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ்(36) என்பவ ரைப் போலீஸார் தேடி வந்தனர். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2012-ம் ஆண்டு வரை கார் ஒட்டுநராக பணியாற்றியவர் எனவும் கூறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, கார் மோதி கனகராஜ் பலியானார்.

இதுகுறித்து ஆத்தூர் போலீஸாரும், கோடநாடு கொலை தொடர்பாக விசாரிக்கும் தனிப்படை போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

கனகராஜுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கே.வி.ஷயான் (எ) ஷியாம்(35) என்பவரையும் போலீஸார் தேடினர். பேக்கரி நிறுவனம் ஒன்றின் கோவை மேலாளராக ஷயான் பணியாற்றினார். இவரது மனைவி வினுபிரியா(30), மகள் நீது(5). இவர்கள் கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே உள்ள சுப்பிரமணியர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென மனைவி, மகளுடன் ஷயான் நேற்று அதிகாலை காரில் திருச்சூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பாலக்காடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது காலை 5.30 மணியளவில் கண்ணடி என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வினுபிரியாவும், மகள் நீதுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஷயான், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கேரள, தமிழக போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஷயானிடம் கோவை ஜே.எம் 5 நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.

ஷயானிடம் போலீஸ் விசாரணை

கோடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த ஷயான், குடும்பத்தினருடன் நேற்று விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை சம்பவத்தில் போலீஸாருக்கு சந்தேகம் இருப்பதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கேரள போலீஸார் நேற்று கோவை வந்தனர். பாலக்காடு தெற்கு காவல்நிலைய போலீஸார் ஷயானிடம் விசாரித்தனர்.

அவர்கள் கூறும்போது, ‘விபத்து தொடர்பாக அலட்சியமாக வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துதல் 304 (a) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அதற்கான விசாரணை நடக்கிறது. அத்துடன், விபத்தில் இறந்த வினுபிரியா, சிறுமி நீது ஆகியோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவர்களது உடல்கள் பாலக் காடு அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

ஏற்கெனவே வினுபிரியா, நீது ஆகியோரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பதாக வெளியான தகவலை போலீஸார் உறுதி செய்வதுபோல கூறியிருப்பதால் இந்த விபத்தில் சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேரைத் தேடி வருவதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மர்மம் என்ன?

காவல்துறையினரிடம் கேட்டபோது, ‘‘கோடநாடு பங்களா காவலாளி கொலை சம்பவத்தில் கேரள பதிவு எண் கொண்ட 2 கார்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கார், ஷயான் குடும்பத்தினர் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்த கருப்பு நிற காராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக கோவையில் உள்ள ஷயானுக்கும், கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக இருந்த சேலம் கனராஜுக்கும், தொடர்பு ஏற்பட்டது எப்படி? கேரளாவில் பிடிபட்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்ற கேள்விகள் உள்ளன. இதற்கு பதில் கிடைக்கும்பட்சத்தில் வழக்கின் முழு விவரங்கள் தெரியவரும்’’ என்றனர்.

விபத்தா, கொலையா?

விபத்தில் பலியான ஷயானின் மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோரது கழுத்தில் ஆழமான காயங்கள் இருப்பதாக தெரிவித்த கேரள போலீஸார் விபத்தா, கொலையா அல்லது தற்கொலை முயற்சியா என்று விசாரித்து வருவதாகக் கூறுகின்றனர். இதனிடையே கோடநாடு கொலை குறித்து விசாரிக்கும் தனிப்படை போலீஸார், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷயான் மிரட்டப்பட்டாரா?

விபத்தில் சிக்கிய ஷயான் குறித்து கோவையில் உள்ள பேக்கரி நிறுவன ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஷயானும், வினுபிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஷயான், கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்தார். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. போலீஸார் விசாரித்த பிறகே இப்படி ஒரு வழக்கு விசாரணையில் அவர் தேடப்படுவது தெரியும்’’ என்றனர்.

இந்த விபத்து தற்கொலை முயற்சியாக இருக்கலாம். யாரேனும் அவரை மிரட்டியிருக்கலாம், அதற்கு கோடநாடு கொலை சம்பவமும் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் தனிப்படை போலீஸார்.

கனகராஜ் யார்?

கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சமுத்திரம் சித்திரபாளையம் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் தனபால் சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக இருந்தார். கனகராஜின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...