News
Loading...

20 ஆயிரம் ரூபாய்க்காக 30 ஆண்டு கால நண்பரை கழுத்து அறுத்து கொலை செய்த கட்டிட மேஸ்திரி

20 ஆயிரம் ரூபாய்க்காக 30 ஆண்டு கால நண்பரை கழுத்து அறுத்து கொலை செய்த கட்டிட மேஸ்திரி

காட்டுமன்னார் கோவில் அருகே 20 ஆயிரம் ரூபாய்க்காக 30 ஆண்டு கால நண்பரை கழுத்து அறுத்து கொலை செய்த கட்டிட மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவில் மரம் வெட்டப்படுவதாக பொய்யான தகவல் கொடுத்து வனக்காவலரை அழைத்து சென்று தீர்த்துக்கட்டிய கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த சமுத்திரம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வனக்காவலர் கணேசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் உள்ள முந்திரிக்காட்டு பகுதியில் தலையில் காயத்துடன் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார்.

நள்ளிரவில் மரக்கடத்தலை தடுக்கச்சென்ற வனக்காவலர் கணேசனை மரக் கடத்தல் கும்பல் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர் இதில் அவரை கொலை செய்தது அவருடன் 30 வருடமாக பழகி வந்த கட்டிட மேஸ்திரி பாவடை என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

வனக்காவலர் கணேசனும், கட்டிட மேஸ்திரி பாவாடையும் நெருங்கிய நண்பர்கள். கணேசனுக்கு 2 வீடுகளை பாவாடைக் கட்டிக் கொடுத்துள்ளார். அதற்காக 20 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார் கணேசன். அந்த பணத்தை கேட்கும் போதெல்லாம் பாவாடைக்கு இலவசமாக மது வாங்கி கொடுத்து அனுப்பி வைப்பது வழக்கமாகி உள்ளது.

அண்மையில் ஒருநாள் அந்த பணத்தை கேட்ட பாவாடையிடம், மதுவாங்கி கொடுத்ததற்கும், அந்த பணத்துக்கும் கணக்கு சரியாகிவிட்டது என்று கூறி பணம் கொடுக்க மறுத்துள்ளார் கணேசன் , இதனால் அதிர்ச்சி அடைந்த பாவாடை அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய, கணேசனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். கணேசனை கொலை செய்து விட்டு மரக்கடத்தல் கும்பல் மீது கொலை பழியை போட்டுவிட முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவில் காட்டுமன்னார் கோவில் வனத்துறை அலுவலகத்தில் கணேசன் மட்டும் பணியில் இருப்பதை உறுதி செய்து கொண்ட பாவாடை, காட்டுப்பகுதியில் மர்ம நபர்கள் மரம் வெட்டி கடத்துவதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வனக்காவலர் கணேசன் காட்டுப்பகுதிக்கு புறப்பட்டும் செல்வதை நோட்டமிட்டு அவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் போனில் சொன்னது போல அங்கு யாரும் மரங்கள் வெட்டி கடத்தவில்லை.

இதையடுத்து அங்கிருந்து மதுக்கடைக்கு சென்ற இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையில் இருந்த கணேசனை முந்திரிக்காட்டுக்கு அழைத்துச்சென்று தலையில் பீர் பாட்டிலால் தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மரக்கடத்தல் கும்பல் கொலை செய்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் அளித்து குழப்பி உள்ளார் கொலையாளி பாவாடை என்கிறது காவல்துறை.

கட்டிட மேஸ்திரி பாவடையை கைது செய்த காவல்துறையினர்.அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நெருங்கிய நண்பராக இருந்தாலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டால், அவருடன் தனிமையில் வெளியே செல்வது எப்போதும் ஆபத்தாக அமையும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...