News
Loading...

போலி ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு சீல்

போலி ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு சீல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய அரசு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதி பெற்றதாக மாணவர்களை ஏமாற்றி நடத்தப்பட்டு வந்த போலி ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், அங்கு படித்து வந்த மாணவ- மாணவிகள் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர்.

அருப்புக்கோட்டையில், Arasu Electro homeopathy மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு நர்சிங் கேட்டரிங் மற்றும் ஐ.டி.ஐ. கல்லூரி என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த கல்லூரியை நாகர்கோவிலைச் சேர்ந்த தஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர், வாடகை கட்டடத்தில் நடத்தி வந்தார். மத்திய அரசு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக அனுமதி பெற்றதாக கூறிக்கொண்ட இந்த கல்லூரி, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இணையான நான்கரை ஆண்டு பி.இ.எம்.எஸ் படிப்பை வழங்குவதாக கூறி, இணையதளத்திலும், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்துள்ளது.

இந்த விளம்பரமும் சொந்த விளம்பரமாக இல்லாமல், வேறு ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தை திருடி மாணவர்களை ஏமாற்றியுள்ளார் அதன் நிறுவனர் தஸ்வின் ஜான் கிரேஸ். விளம்பரத்தில் காட்டப்படும் எந்த வசதிகளும் இந்த போலி மருத்துவ கல்லூரியில் இல்லை. சுவர்களில் வண்ணம் பெயர்ந்து விழுந்த மோசமான ஒரு சின்னஞ்சிறிய வாடகை கட்டடம்தான் இந்த எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவக் கல்லூரி.

இந்த மருத்துவக் கல்லூரியில் படித்தால், பில்ராத், மீனாட்சி மிஷன் உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளிலும், இவர்களது ஐ.டி.ஐ.யில் படிப்பவர்களுக்கு பெல், இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களிலும், கேட்டரிங் படிப்பவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள், சொகுசு கப்பல்களில் வேலை கிடைக்கும் எனவும் ஏமாற்று விளம்பரம் செய்துள்ளார் தஸ்வின் ஜான் கிரேஸ்.

உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் பார்த்து, இதை உண்மை என நம்பிய 120 மாணவிகளும் 26 மாணவர்களும் இந்த கல்லூரியில் பணம் கட்டி பயின்று தங்கள் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எவ்விதமான அனுமதியும் பெறாமல் இந்த கல்லூரி இயங்கி வருவது குறித்து பொதுமக்கள் சிலர் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செந்தில்குமார் திங்கட்கிழமை அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அடிப்படை வசதிகள் இல்லாமலும், உரிய அனுமதி இல்லாமலும் கல்லூரி இயங்கி வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கல்லூரியை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, அப்பாவி கிராமப்புற மாணவிகள் செய்வதறியாது கண்ணீர்விட்டு அழுதனர்.

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த மூடப்பட்ட கல்லூரிகளில் இந்த Arasu Electro homeopathy மருத்துவக் கல்லூரியும் ஒன்று. ஆனாலும், மாணவர்களை ஏமாற்றி இந்த கல்லூரி தொடர்ந்து இயங்கி வந்துள்ளது. முடக்கப்பட்ட பட்டியல் குறித்து அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள், அத்தகைய கல்லூரிகள் தொடர்ந்து இயங்குவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி கிராமப்புற மாணவர்கள் எதிர்காலமே பாழாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...