News
Loading...

பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி கண்டித்து -வணிகர்கள் கடையடைப்பு: டிஐஜி விசாரணை

சாமளாபுரத்தில் போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம்
சாமளாபுரத்தில் போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தின்போது பெண்ணைத் தாக்கிய ஏடிஎஸ்பி-க்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டிஐஜி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி(45) என்ற பெண்ணை திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கொடூரமாகத் தாக்கினார்.

மதுக் கடைக்கு எதிராகப் போராடியவர்கள் தாக்கப்பட்டதும், அப்பாவி பெண்ணை ஏடிஎஸ்பி தாக்கியதும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎஸ்பி அறைந்ததால் காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஏடிஎஸ்பி-க்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் ஆயிரக்கணக்கானோர் ஏடிஎஸ்பி-க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“ரவுடிகள், தேச விரோதிகள், பயங்கரவாதிகளிடம் வீரத்தைக் காட்டுங்கள், வலிமை குறைந்த பெண்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியா?” என்று ஏடிஎஸ்பி-க்கு கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்ப்புகள் வலுப்பதால் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் நெருக்கடியில் சிக்கியுள்ளார். ஃபேஸ்புக்கில் ஏடிஎஸ்பி-யின் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு, அவரிடம் நியாயம் கேளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அவரை பலரும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றனர். ஒரு கட்டத்துக்குப் பிறகு ஏடிஎஸ்பி-யின் செல்போன் ‘நாட்-ரீச்சபுள்’ நிலையை அடைந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்குமாறு டிஜிபி, தலைமைச் செயலாளர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஏ.பாரி ‘தி இந்து’விடம் கூறியதாவது: சாமளாபுரத்தில் நடந்த தடியடியின்போது காயமடைந்ததாக பத்திரிகையாளர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் தரப்பில் இதுவரை புகார் எதுவும் வரவில்லை. எனினும், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோவை சரக டிஐஜி-க்கு உத்தரவிட்டுள்ளேன். டிஐஜி தீபக் எம்.தாமோர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

போராட்டம் வாபஸ்

போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் மாலை அப்பகுதி பொதுமக்கள் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களில், 27 பேரை நேற்று அதிகாலை கைது செய்த போலீஸார், மாலையில் அவர்களை விடுவித்தனர். இதையடுத்து, நேற்று இரவு 7 மணிக்கு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக, சாமளாபுரம் முழுவதும் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் 'தி இந்து’விடம் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை அடிப்பதற்கு போலீஸாருக்கு அதிகாரம் இல்லை. சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் வந்து சென்றதும், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த இந்த போராட்டம் ஒரு தொடக்கமாக இருக்கும். பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி மற்றும் போலீஸாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

இந்நிலையில், போலீஸ் தாக்குதலில் காயமடைந்தவர்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாமக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கிராம மக்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மதுக்கடை திறக்கப்படாது

பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதால், சாமளாபுரத்தில் புதிதாக திறக்கப்பட இருந்த மதுக்கடை திறக்கப்படாது என திருப்பூர் ஆட்சியர் ச.ஜெயந்தி நேற்று மாலை அறிவித்தார். பாதுகாப்புப் பணிக்காக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் சாமளாபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏடிஎஸ்பி பாண்டியராஜன்

ஏடிஎஸ்பி பாண்டியராஜனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம். 2005-ம் ஆண்டு குரூப்- 1 தேர்வில் வெற்றிபெற்று, ஆண்டிபட்டியில் பயிற்சி டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார். பழநி, உத்தமபாளையம், பெரியகுளம் என பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தவர். விழுப்புரத்தில் ஏடிஎஸ்பியாக இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக திருப்பூரில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...