News
Loading...

இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர மணல் குவாரி மூலம் 50 கோடி வசூல்

இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர மணல் குவாரி மூலம் 50 கோடி வசூல்

ணல் குவாரி மூலம் ரூ.50 கோடி வசூலித்ததாக போலீசில் டிடிவி தினகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் 5 நாள் போலீஸ் காவல் முடிந்ததால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 16ம் தேதி டெல்லி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை டெல்லி போலீசார் கடந்த 25ம் தேதி நள்ளிரவு கைது ெசய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரப்படி டிடிவி.தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிடிவி.தினகரன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை டெல்லி போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹவாலா ஏஜென்ட் நத்து சிங்(எ) நரேஷை டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது ெசய்து இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.   

அப்போது டிடிவி.தினகரன் கொடுத்த ஹவாலா பணத்தை தனது வீட்டில் வைத்திருப்பதாக நரேஷ் தெரிவித்தார். அதன்படி ஹவாலா ஏஜென்ட் நரேஷின் டெல்லி அலுவலகம் மற்றும் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நரேஷ் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் ஹவாலா பணத்தை கட்டுக்காட்டாக கைப்பற்றினர். இதையடுத்து டிடிவி.தினகரன், மல்லிகார்ஜூனா முன்னிலையில் ஹவாலா ஏஜென்ட் நரேஷை நேரடியாக வைத்து விசாரணை நடத்தினர். அப்போது தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அனுப்பிய ஹவாலா பணம் என்று டிடிவி.தினகரன் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டிடிவி.தினகரனின் வங்கி கணக்குகளை டெல்லி போலீசார் உடனே முடக்கினர். மேலும் தமிழக அமைச்சர்கள் பெயரையும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சேகர் ரெட்டி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை, சிபிஐ பிடியில் சிக்கியதைத் தொடர்ந்து, ஈரோட்டைச் சேர்ந்த மணல் குவாரி அதிபருக்கு புதிய மணல் குவாரி கான்டிராக்ட் கொடுக்கப்பட்டது. அவர்தான் ரூ.50 கோடியை கொடுத்ததாக டிடிவி.தினகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு திடீரென்று மணல் குவாரியை இரண்டு நாட்களுக்கு முன் மூட உத்தரவிட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறையினர் அல்லது அமலாக்கப் பிரிவினர் மணல் குவாரி அதிபர்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது. அதேபோல் ஹவாலா ஏஜென்ட் நரேஷின் 2 நாள் போலீஸ் காவலும் முடிந்தது. இதையடுத்து டிடிவி.தினகரன், மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகிய 3 பேரையும் தெற்கு டெல்லி சாணிக்கியபுரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து உதவி கமிஷனர் சஞ்ஜெய் ஷெராவத் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 2.40 மணிக்கு தீஸ்ஹசாரே மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது உதவி கமிஷனர், டிடிவி.தினகரன், மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் 150 பக்கங்கள் கொண்ட முழு அறிக்கையை நீதிபதியிடம் தாக்கல் செய்தார். அப்போது டிடிவி.தினகரன் வக்கீல் விகாஷ் பவா, டிடிவி.தினகரன் உடல் நிலை கருத்தில் கொண்டு அவரை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதி மருத்துவ பரிசோதனை எல்லாம் முறையாக நடத்தப்படும் என்றார். பின்னர் இந்த வழக்கில் அடுத்த விசாரணையின் போது டிடிவி.தினகரனை பாதுகாப்பு கருதி நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல், சிறையில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூனம் சவுத்ரி, டிடிவி.தினகரன், மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரை வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு  உடன் டிடிவி.தினகரன் உட்பட 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை டிடிவி.தினகரன் உள்பட மூன்று பேரையும் திகார் சிறையில்  அடைத்தனர்.

*  ஈரோட்டை சேர்ந்த மணல் குவாரி அதிபருக்கு புதிய கான்டிராக்ட்  கொடுக்கப்பட்டது. அவர்தான் 50 கோடியை கொடுத்தார்.
*  இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்துதான் தமிழக அரசு திடீரென்று மணல்  குவாரியை மூட உத்தரவிட்டது. 
*  மணல்  குவாரி அதிபர்கள், தமிழக அரசின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...