News
Loading...

லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1,000 கோடி நில மோசடி

லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1,000 கோடி நில மோசடி

பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1,000 கோடி நில மோசடி

கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டவுடன், அவருடைய குடும்பத்தினர் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் எந்த பாடமும் கற்கவில்லை. மாறாக, நில மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். லாலுபிரசாத்தின் அரசியலே, கொள்ளை அரசியலாக மாறி விட்டது.

நில பேரத்துக்காக, லாலுபிரசாத் குடும்பத்தினர் தொடங்கிய நிறுவனங்களில் எந்த ஊழியர்களும் இல்லை, வர்த்தக நடவடிக்கையும் இல்லை, விற்றுமுதலும் இல்லை. நில பேரத்துக்காக, போலியாக அவற்றை தொடங்கி உள்ளனர். இத்தகைய ஒரு சந்தேகத்துக்குரிய பேரத்தில் வாங்கப்பட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பீகாரின் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது, தனது சொத்து விவரத்தை குறிப்பிடவில்லை.

அவர் சமீபத்தில் டெல்லியில் பிஜஸ்வான் என்ற இடத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு வாங்கினார். பிறகு ஒரு கம்பெனியை தொடங்கி, அதன் தலா 10 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 90 ரூபாய்க்கு விற்றார். ஒரு மாதம் கழித்து, அதே பங்குகளை வெறும் ஒரு ரூபாய்க்கு திருப்பி வாங்கி உள்ளார். சோனியா காந்தி மருமகன் பாணியில் இந்த விவகாரம் நடந்துள்ளது.

மிசா பாரதியின் கம்பெனியில், லாலுவின் மனைவி ராப்ரி தேவி 80 சதவீத பங்குகளும், மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் 15 சதவீத பங்குகளும் வைத்துள்ளனர். அவர்களின் முகவரியாக, லாலு வீட்டு முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது.

லாலுபிரசாத் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது அளித்த சலுகைகளுக்கு பிரதிபலனாக இந்த நில பேரங்களில் அவரது குடும்பத்துக்கு ஆதாயம் அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.1,000 கோடி அளவுக்கு நில பேர மோசடி நடந்துள்ளது. அக்குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு சவால் விடுக்கிறோம்.

சட்டவிரோத பணத்தில் வாங்கிய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அவரது அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்றியது. அதை பிரயோகிக்க அவர் தயாரா?

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...