News
Loading...

சிறுதானியங்களுக்குச் சிவப்புக் கம்பளம்!

சிறுதானியங்களுக்குச் சிவப்புக் கம்பளம்!

‘‘இந்தியாவின் மிகப்பெரிய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு விவசாயிகளை அழைத்து ‘சிறுதானிய மாநாடு’ நடத்தும் அளவுக்கு சிறுதானியத்துக்கான முக்கியத்தும் ஏற்பட்டுள்ளது. சிறுதானிய உணவுகள் கேவலமானவை; அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் தயாராகும் உணவுகள்தான் நாகரிகமானவை என்ற நிலை மாறிவிட்டது. மீண்டும் சிறுதானியங்களின் காலம் ஆரம்பமாகிவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகளில், சிறுதானியங்கள்தான் முக்கிய பயிராக இருக்கும். நீர்வளம் குறைவாக இருந்தாலும், விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டவையாகச் சிறுதானியங்கள் இருப்பதுதான் இதற்கு காரணம்...’’ 

-இப்படி போற்றிப் புகழ்ந்திருக்கிறார் தமிழக அரசின் திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் சாந்தஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இவர் திட்டக்குழுவில் இருந்த காலகட்டத்தில், சிறுதானியங்கள் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர். அதனால்தான் ‘சிறுதானியங்களே இனி முக்கிய பயிராக இருக்கப் போகின்றன’ என்று கட்டியம் கூறியிருக்கிறார். 

சிறுதானிய விவசாயம் மற்றும் அதன் பலன்களை இயற்கை ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக மீடியாக்களும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்தச் செய்தி நம்பிக்கை தருவதாக இருக்கிறது. கண்முன்னே நல்ல மாற்றங்களும் தெரியத் தொடங்கிவிட்டன. 

‘ஏழைகளின் உணவு’ என்று சொல்லிச் சொல்லியே, ஏழைகளிடமிருந்து தந்திரமாகப் பறித்து ஒழிக்கப்பட்ட கம்பு, சோளம், ராகி, வரகு, தினை, சமை, சிவப்பு கைகுத்தலரிச்சி, கொள்ளு, பார்லி போன்ற சிறுதானியங்களுக்கு மீண்டும் சிவப்புக் கம்பள மரியாதை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அளவுக்கு அதிகமான நீர், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி விஷம் என எதுவுமே தேவைப்படாத, விவசாயிகளுக்குக் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தாத சிறுதானிய விவசாயம் மீண்டும் கொடிகட்டுவது காலத்தின் கட்டாயமே! 

விழிப்போம்... எழுவோம்... உயர்வோம். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...