News
Loading...

அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன்: ரஜினி அதிரடி

அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன்: ரஜினி அதிரடி

ரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன் என்று ரசிகர்கள் மத்தியில் பேசும் போது ரஜினி குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். மே 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள்.

ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனோடு ரஜினி கலந்து கொண்டார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதற்கு பின்பு ரஜினி பேசியதாவது:

"முதலில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனைப் பற்றிப் பேச விரும்புகிறேன். ஏற்கனவே சென்னையில் இருக்கும் எனக்கு இன்னொரு சகோதரர் அவர். அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு, எனக்குச் சொல்லிக் கொடுத்தப் பாடங்கள் நிறைய உள்ளது. அதிக ஒழுக்கத்தை நான் எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன். உண்மை, நேயம், சத்தியம் முதலியவற்றை எஸ்.பி.முத்துராமனிடம் பார்த்தது போல நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை.

எப்போது நான் அவரை சந்தித்தாலும் 2 விஷயங்களைச் சொல்வார். "முதலில், ரஜினி எதையும் டென்சன் பண்ணிக் கொள்ளாதே. உடம்பைப் பார்த்துக் கொள். இரண்டாவது ரசிகர்களை மீட் பண்ணு. அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள். நான் எங்கே போனாலும் ரசிகர்கள் என்னிடம் சாரை மீட் பண்ணச் சொல்லுங்கள்" என்று சொல்கிறார்கள் என்பார்.

நான் எஸ்.பி.முத்துராமன் சாரோடு 'ஆறிலிருந்து அறுபது வரை' படம் தான் முதலில் பணிபுரிந்தேன். அந்த நாட்களைப் பற்றி பேசுவதற்கு வெட்கமாக உள்ளது. இருந்தாலும் சொல்லித் தான் ஆகவேண்டும். அப்போது குடி என்கிற கெட்டப் பழக்கம் என்னிடம் இருந்தது. இரவுப் பணிகள் முடித்துவிட்டு தூங்கிவிடுவேன். காலை படப்பிடிப்புக்குச் செல்ல தாமதமாகும். 3 நாட்கள் தாமதமாக சென்றவுடன், நான்காவது நாள் மேக்கப் மேன் முத்தப்பா என்னிடம் "இயக்குநர் உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்கிறார்" என்றார். அப்போது அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முத்துராமன் சார் வந்தார். "ரஜினி.. நீ இப்போது படத்தில ஹீரோ. ஹீரோ சரியான நேரத்துக்கு வந்தால் மட்டுமே அனைவரும் சரியாக வருவார்கள். ஹீரோவே லேட்டாக வந்தால், அனைவருமே லேட்டாகத்தான் வருவார்கள். அதனால் நீ முதலில் செட்டுக்கு (படப்பிடிப்பு தளத்துக்கு) வந்துடு" என்று சொன்னார். அன்றிலிருந்து நான் தான் படப்பிடிப்புக்கு முதலில் செல்வேன்.

ஒரு சில நாட்கள் தூங்கிவிடுவேன். அப்போது "ஏன் என்னை எழுப்பவில்லை" என்று கேட்டால் "வேறு வேலை இருக்கிறது. ரெஸ்ட் எடுக்கட்டும். எழுப்பாதீர்கள்" என்று எனது உதவியாளர்களிடம் முதலிலேயே சொல்லி வைத்துவிடுவார் எஸ்.பி.முத்துராமன் சார். எனக்கு வழிக்காட்டியாக இருந்தவர் அவர்.

ரசிகர்களை சந்தித்து 15 வருடங்களாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் வெற்றியடைந்தால் வெற்றிவிழா கொண்டாடுவார்கள். அங்கு சந்திப்போம். இப்போது 12 வருடங்களாக அந்த மாதிரியான விழாக்கள் நடக்கவில்லை. 'எந்திரன்' நல்ல வெற்றியடைந்தது. ஆனால் வெற்றி விழா சில காரணங்களால் அவர்கள் செய்யவில்லை. அதற்குப் பிறகு 'கோச்சடையான்', 'குசேலன்' படங்கள் எல்லாம் சரியாகப் போகவில்லை. 'கபாலி' நல்ல வெற்றி தான். சில காரணங்கள், சில நிகழ்வுகளால் விழாவாக கொண்டாட முடியவில்லை. அந்த நேரத்தில் விழா கொண்டாடினால் மட்டுமே சரியாக இருக்க முடியும். இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் முதலில் சந்திக்கலாம் என்று முடிவு செய்த போது, ஏன் முடியவில்லை என்ற காரணத்தை சொல்லியிருந்தேன். 5 நாட்களில் மொத்தமாக சந்திக்கலாம் என்று முடிவு செய்து, 8 பேராக புகைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்த போது சில பிரச்சினைகள் வந்ததால் ஒத்திவைத்தேன். அதனைத் தொடர்ந்து சரியாக திட்டமிட்டு, நாமெல்லாம் எப்படி, கட்டுப்பாட்டோடு ஒழுக்கமாக நடைபெற வேண்டும் என்று நினைத்தேன். இடையே '2.0' டப்பிங் பணிகள் இருந்தது. மேலும், மே 28-ம் தேதி அடுத்த படத்தின் பணிகள் துவங்குகிறது. அதற்கான கதை விவாதப் பணிகள் எல்லாம் இருந்தது. அதனால் தான் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. இப்போது நேரம் கிடைத்ததால் ஏற்பாடு செய்துள்ளோம்.

இலங்கை போவதாக இருந்தது. அதுவும் சில காரணத்தால் போக முடியாமல் ரத்து செய்யப்பட்டது. உடனே, ஊடக நண்பர்கள் ரஜினி எதிலுமே திடமாக நிற்க மாட்டார். அனைத்தையும் ரத்து செய்துக் கொண்டே இருப்பார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் எழுதினார்கள். நான் ஒரு விஷயம் முடிவு எடுத்தால், ரொம்ப யோசிப்பேன். சில முடிவுகள் எடுத்தவுடன் தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது தெரியும். நாம் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்.

ரஜினி ஒரு படம் வெளியாகும் போது மட்டும், ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார், ஏதாவது சொல்லுவார், படம் ஓடுவதற்கு ஏதாவது யுக்திகள் செய்வார் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. உங்களுடைய ஆசீர்வாதத்தாலும், அன்பாலும் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் என்னுடைய ரசிகர்கள், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். என்னவோ தெரியவில்லை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். அதை இப்போது நான் சொல்லவிரும்பவில்லை. அரிசி வெந்தால் மட்டுமே சோறாகும். படம் நன்றாக இருந்தால் மட்டுமே வெற்றியடையும். முத்துராமன் சார் மற்றும் பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகள் கொடுத்து, நல்ல திரைக்கதை அமைத்து, நல்ல பாடல்கள் கொடுத்து, நல்ல கருத்துகள் சொல்லி, நல்ல படங்கள் கொடுத்ததால் மட்டுமே நான் இங்கே நிற்கிறேன். என்னுடைய படங்கள் வரும் போதெல்லாம் ரஜினி ஏமாற்ற மாட்டார், நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே படத்துக்கு வருவீர்கள். என்னால் முடிந்தவரைக்கும் அதை செய்து கொண்டிருக்கிறேன்.

இன்னொரு விஷயம் முக்கியமாக பேசுகிறார்கள். அரசியல் சம்பந்தமாக ரஜினி எதையும் சொல்ல மாட்டார். கருத்து சொல்ல மாட்டார். ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு காரணமே அரசியல் மாயைக் காட்டத் தான் என்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது ஓர் அரசியல் விபத்து என்று சொல்லலாம். அந்த சமயத்தில் சில சூழ்நிலைகள் காரணமாக நான் ஒரு அரசியல் கூட்டணிக்கு என்னுடைய அதரவை தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்கள், நான் ஆதரித்த கூட்டணிக்கு வாக்குகள் அளித்து ஜெயிக்க வைத்தார்கள். அப்போதிலிருந்து எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. அப்போது என்னுடைய ரசிகர்களில் சில பேர் அரசியலில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு விட்டார்கள்.

சில அரசியல்வாதிகள் அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ரசிகர்களும் அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அதில் சிலர் பணமெல்லாம் பார்த்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல் வரும் போது ரசிகர்கள், அரசியல்வாதிகளை நாடுவது, அவர்கள் இவர்களை நாடுவது என தொடங்கிவிட்டது. அதனாலே நான் ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், என்னுடைய ஆதரவு யாருக்குமில்லை என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறேன். அனைவருமே என்னுடைய ஆதரவுக்காக காத்திருப்பதில்லை. என்னுடைய பெயரை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சொல்கிறேன்.

பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக் கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள், கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும் போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூயமையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாக பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன். இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி என்ன பொறுப்புக் கொடுத்தால் கூட நியாயமா, உண்மையா, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும்.

நீங்கள் ஒரு கெட்ட காரியம் செய்யும் போது, மனசாட்சி செய்ய வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி தான் நாம் செய்கிறோம். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். இப்போதே சொல்லிவிடுகிறேன். இன்னும் நிறைய பேச வேண்டும் என்ற ஆசையிருந்தால் கூட நேரமின்மை காரணமாக முடித்துக் கொள்கிறேன்.

தயவு செய்து குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றை பார்த்துக் கொள்ளுங்கள். குடி, சிகரெட் பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிடுங்கள். கோடி கோடியாக பணமிருந்தது அனைத்தையும் குடித்தே நாசமாக்கிவிட்டான் என்று சொல்லுவார்கள். குடி பழக்கத்தால் மூளையும் கெட்டுப் போய்விடும். குடித்தால் நமது சிந்தனை சக்தியும் வேறு மாதிரி மாறிவிடும். அப்படி மாறும் போது நாம் எடுக்கும் முடிவு எல்லாம் தப்பாக போய்விடும். அதனால் நம் வாழ்க்கையே கெட்டுவிடும். ஆகையால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள், தயவு செய்து தொட வேண்டாம். குடிப்பழக்கம் இருப்பவர்கள் முழுமையாக விடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

தனித்தனியாக புகைப்படம் எடுத்தால் நேரமாகும் என்ற காரணத்தால் நான் உட்காருகிறேன். அனைவருமே என் பின்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொடுங்கள். என்ன செய்தாலும் ஏதாவது ஒரு தவறு நிகழும். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் தயவு செய்து மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இங்கு வர முடியாத ரசிகர்களுடனும் விரைவில் புகைப்படம் எடுக்கிறேன்" என்று பேசினார் ரஜினி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...