News
Loading...

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் பலி

காஷ்மீரில் குடியிருப்புப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்
காஷ்மீரில் குடியிருப்புப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்

காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவரது கணவர் காயமடைந்தார்.

இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து புதன்கிழமை இரவு 10.40 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். தானியங்கி ஆயுதங்கள், பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல் நடத்தினர். குடியிருப்புப் பகுதியையும் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நவுசாரா செக்டாரைச் சேர்ந்த அக்தர் பீ என்ற பெண் பலியானார். அவரது கணவர் முகமது ஹனீப் (40) காயமடைந்தார். இந்தியத் தரப்பு தொடர்ந்து தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது" என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை 6 முறை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடைசியாக கடந்த 1-ம் தேதி எல்லையில் ரோந்துப் பணியில் இருந்த இந்திய வீரர்கள் இருவரது தலையைத் துண்டித்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது.

எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவம் இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை புள்ளிவிவரத்தின்படி கடந்த 2015, 2016 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 2015-ல் 449 முறையும் 2016-ல் 405 முறையும் அத்துமீறியுள்ளது. இந்த காலகட்டங்களில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு 236 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் 90 பேரும் பலியாகினர் என அந்த புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1142 தீவிரவாத தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...