News
Loading...

புதிய டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறை : மதுபாட்டில்களை உடைத்து தீ வைப்பு

புதிய டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறை : மதுபாட்டில்களை உடைத்து தீ வைப்பு

ஆரணி அடுத்த மலையாம்பட்டு அருகே புதிதாக  திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறையாடினர். அங்கிருந்த மது பாட்டில்களை வெளியே எடுத்து உடைத்து தீயிட்டு கொளுத்தினர். இதுதொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மலையாம்பட்டு அருகே 2 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இக்கடையில் குடிமகன்கள், மது பாட்டில்களை வாங்கி சாலையோரம் மரத்தடியில் அமர்ந்து சாவகாசமாக குடிக்க ஆரம்பித்தனர். போதை ஏறியதும் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வது, மது பாட்டில்களை அங்கேயே வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் கடையை திடீரென முற்றுகையிட்டனர். கடையை திறக்க வந்த ஊழியர்கள், போராட்டக்காரர்களை பார்த்ததும் அங்கிருந்து நழுவினர். இதையடுத்து சிலர், கடையின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்து தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஆரணி டவுன் போலீசார் விரைந்து வந்து, டாஸ்மாக் கடையை சூறையாடியதாக 10 பேரை மடக்கிப் பிடித்து,  காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...