News
Loading...

போலி விவசாயிகளைத் தண்டியுங்கள்!

போலி விவசாயிகளைத் தண்டியுங்கள்!

“விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசாங்கத்துக்கு இல்லை” எனத் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி. மத்திய அமைச்சர் திடீரென இப்படியொரு அறிவிப்பு வெளியிடக் காரணம், ‘விவசாயத்தின் மீதான வரிச் சலுகையை நீக்க வேண்டும்; கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரின் வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால், வரி விதிக்க வேண்டும்’ என நிதி ஆயோக் உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான பிபேக் தேப்ராய் செய்த பரிந்துரைதான். இந்தப் பரிந்துரை அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தவே, இதற்குத் தெளிவான விளக்கம் தந்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர். 

“விவசாயத்தைக் காரணம் காட்டி, சில பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டுமெனில், விவசாய வருமானத்தின் மீது வரி விதிக்க வேண்டும்” என்பது தேப்ராயின் வாதம். அவரது இந்த வாதத்தில் நிச்சயம் உண்மை உண்டு. 2010-ல் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த 4.25 லட்சம் விவசாயிகளின் சராசரி வருமானம் ரூ.19.5 லட்சமாக இருந்தது. இதுவே 2011-ல் ரூ.30 கோடியாக எகிறியது. அடுத்த ஆண்டே இது ரூ.83 கோடியாக உயர்ந்தது.  இதற்குக் காரணம், விவசாய உற்பத்தி பெருகியதல்ல. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் தங்களிடமுள்ள கறுப்புப் பணத்தை விவசாய வருமானமாகக் காட்டி,  வெள்ளையாக்கி இருக்கிறார்கள். இந்த மோசடியைத் தடுக்கவே விவசாய வருமானத்தின் மீது வரி என்கிற தீர்வை சொல்லியிருக்கிறார் தேப்ராய்.   

ஆனால், ஒரு சில பெரும் பணக்காரர்கள் செய்யும் இந்த மோசடியைத் தவிர்க்க, ஒட்டுமொத்த விவசாயிகளையும் வரி விதிப்புக்கு உள்ளாக்குவது நிச்சயம் சரியான தீர்வாக இருக்காது. காரணம், விவசாயம் என்பது நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழில் அல்ல. ஒரு விவசாய நிலத்திலிருந்து நிச்சயமாக வருமானம் கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும் அதற்குச் செய்த செலவு எவ்வளவு, கிடைத்த லாபத்தின் அளவு எவ்வளவு என்பதையெல்லாம் துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கான விதிமுறைகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. இந்த விதிமுறைகளை உருவாக்க, மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், வரி ஏய்ப்பு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களை மத்திய அரசாங்கம் இன்னும் கறாராகக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கலாம். அதையெல்லாம் செய்யாமல்,  விவசாயிகள் சம்பாதிக்கும் கொஞ்சநஞ்ச வருமானத்தின் மீது வரி விதிக்க நினைப்பது அவர்களை ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சியாகவே அமையும். இந்த முயற்சிக்கு எந்த அரசாங்கமும் துணை போகக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...