News
Loading...

கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் லேப்டாப் திருடி வந்த அண்ணன், தம்பி கைது

கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் லேப்டாப் திருடி வந்த அண்ணன், தம்பி கைது

ல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் அதிகாலையில் புகுந்து லேப்டாப் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்களை பறிமுதல் செய்யப்பட்டன. வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாடகைக்கு  வீடு எடுத்து தங்கியுள்ளனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி லேப்டாப்கள் மட்டும் திருடு போவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் குமரன், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் லேப்டாப்கள் திருடு போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பார்த்ததில் சில இடங்களில் மட்டும் 2 பேர் அடிக்கடி பைக்கில் சுற்றி திரிந்தது தெரிந்தது. இதையடுத்து பைக் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் (28), அவரது தம்பி முத்துக்குமார் (25) என தெரிந்தது. இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும், நேற்று முன்தினம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு, 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்தது.

அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: சுரேஷ்குமார் அவரது தம்பி முத்துக்குமார் இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். இருவரும், கல்லூரி மாணவர்கள் குழுவாக தங்கியுள்ள வீடுகளை நோட்டமிடுவார்கள். அந்த குழுவில் உள்ளவர்கள் அதிகாலை நேரங்களில் வேலைக்கோ அல்லது கல்லூரிக்கோ கதவை திறந்து வைத்து விட்டு செல்வார்கள். அறையில் உள்ள மற்றவர்களும் தூங்கிக் கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் அந்த வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள விலை உயர்ந்த லேப்டாப்களை திருடிக் கொண்டு சென்று விடுவார்கள். இதுபோல் கொள்ளையடிக்க வீட்டுக்குள் நுழையும்போது, யாராவது பார்த்து விட்டால் அவர்களிடம் “தான் ஒரு ஊமை என்றும் தனக்கு பணம் கொடுத்து உதவி செய்யும்படி”யும் எழுதி இருக்கும் ஒரு நோட்டீசை காண்பித்து அவர்களிடம் பணம் வாங்கி செல்வார்கள்.

மேலும் போலீசாருக்கு தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க பகல் நேரங்களில் தனியார் நிறுவனத்தின் பால் மற்றும் ஐஸ்கிரீம்களை கடைகளுக்கு சப்ளை செய்யும் வேலையும் செய்து வந்துள்ளனர். அந்த நேரங்களில்தான் எந்த வீட்டில் திருடலாம் என்று திட்டம் தீட்டி உள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்படி 20 லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும்  ஆவடி, செம்மஞ்சேரி, திருமுல்லைவாயல் உள்பட பல பகுதிகளில் ஏற்கனவே லேப்டாப் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...