News
Loading...

அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு

அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு

மிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது பண மோசடி புகார் கொடுத்த ஒப்பந்ததாரர் மீது பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது ரூ.30 லட்சம் பண மோசடி புகார் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடவாசல் தாலுகா சீதக்கமங்கலத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கலைவண்ணன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர் குமார் மீது நேற்று புகார் மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அந்த மனுவில் கலைவாணன் கூறியிருப்பது குறித்து ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

நான் பி.பார்ம் படித்துள்ளேன். எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்தை 4 தவணைகளாக நாகராஜன் என்பவர் மூலம் ஒப்பந்ததாரர் குமார் பெற்றுக்கொண்டார். பின்னர், விசா வந்துவிட்டதாகக் கூறி என்னை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றார். அங்கு சென்றதும் என்னை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். நான் கொடுத்த பணத்தை திருப்பித் தராமல் குமார் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி 25-ம் தேதி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். இதையடுத்து, குமார் என்னை தொடர்புகொண்டு ரூ. 3.5 லட்சத்துக்கு தேதியிடாத காசோலையை வழங்கிவிட்டு, மீதிப் பணத்தை விரைவில் தந்துவிடுவதாகக் கூறினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணமில்லாமல் திரும்பிவிட்டது. எனவே, பண மோசடி செய்த குமார், நாகராஜ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.

அமைச்சர் காமராஜ் மீது பண மோசடி புகார் அளித்தவர் மீதும் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...