News
Loading...

டைரக்டர் ரஹ்மான்!

டைரக்டர் ரஹ்மான்!

‘சின்னச் சின்ன ஆசை... சிறகடிக்க ஆசை...’ என ரஹ்மானும் ஃபீல் பண்ணியிருப்பார் போல. ‘இயக்குநராக வேண்டும்’ என்ற அவரது நீண்ட நாள் கனவு இப்போது நனவாகியிருக்கிறது. ‘லெ மஸ்க்’ என்ற ஹாலிவுட் படத்துக்கு கதை எழுதி ஸ்டார்ட், கட், ஆக்‌ஷன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். உலகின் முதல் virtual reality multisensory episodic படமாக இது உருவாகி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிளாப் அடித்து தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் ரோம் உள்பட பல நகரங்களில் ரெடியாகி வருகிறது. 

‘‘ஃபிலிம் மேக்கிங் ரொம்ப கடினமான வேலை. அதுக்கு இரண்டு வருட உழைப்பு தேவைப்படும்னு நினைச்சுக் கூட பார்க்கலை. ஐ லவ் மியூசிக். இந்தப் படத்துக்கு இசையும் அமைச்சிருக்கேன். இரண்டு வருஷங்களுக்கு முன்னாடி என் நண்பர்கள்ல யாரோ இந்த வி.ஆர். ஹெட் செட்டை பரிசா கொடுத்தாங்க. அதுல இருந்து இப்படி ஒரு டெக்னாலஜில படம் இயக்கணும்னு விரும்பினேன்.

இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கும் புது அனுபவத்தைக் கொடுக்கும். 70 சதவிகித படம் நடக்கிற இடத்துல நீங்களும் இருக்கிற மாதிரி உணருவீங்க...’’ என்கிறார் ரஹ்மான். இந்தப் படத்தில் நோரா அர்னெஸாடர், கை பர்னட், முனிரி கிரேஸ் என பலரும் நடிக்கிறார்கள். 

டைரக்டர் ரஹ்மான்!

‘‘ரஹ்மானுக்கு எப்படி இயக்குநர் ஆசை வந்தது?’’ என விசாரித்தால்... ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. ‘‘உலக சினிமா பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். தான் இசையமைக்கும் படத்தின் கதையில் கூட அவர் மிகுந்த கவனம் செலுத்துவார். தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் ‘கதையை இப்படி மாற்றலாமே...’ என ஆலோசனை வழங்குவார்...’’ என்கிறது கோலிவுட். 

கனடாவில் டொரன்டோ நகரில் அமைந்துள்ள ஐடியல் குழுமம், ஐடியல் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ‘லெ மஸ்க்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இதனிடையே சத்தம் இல்லாமல் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வேலையிலும் இறங்கிவிட்டார் ரஹ்மான். ‘‘என்னோட அடுத்த படமும் இதே டெக்னாலஜிதான். அதுல இந்திய கலாசாரத்துக்கும் இந்திய நடனங்களுக்கும் முக்கியத்துவம் தரப் போறேன்...’’ என நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். கலக்குங்க ரஹ்மான்!  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...