News
Loading...

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத மேம்பாலம்.. பொதுமக்களே திறந்துகொண்டனர்!

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத மேம்பாலம்.. பொதுமக்களே திறந்துகொண்டனர்!

நெல்லையில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பாலம் திறக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், தாங்களே அதைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். 

நெல்லை-பாபநாசம் சாலையில் செல்லும் வாகனங்கள் முன்னீர்பள்ளம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் நீண்டநேரமாகக் காத்துக் கிடக்கும் நிலையை மாற்றும் வகையில் அந்த இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது. 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2014 நவம்பர் மாதத்தில் கட்டத் தொடங்கிய இந்தப் பாலத்தை 30 மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், திட்டமிட்ட காலத்துக்குள் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை.

இந்தப் பணி நடைபெற்றதால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன், 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்வோரும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் பெரும்பாதிப்புக்கு உள்ளானார்கள். 

இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்து விட்டது. ஆனாலும், பாலத்தை திறக்காமல் வைத்திருந்தனர். இதனால் வாகனங்கள் தொடர்ந்து மாற்றுப் பாதையிலேயே குறுகலான வழியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்து வந்தார்களே தவிர பாலத்தைத் திறப்பதாகத் தெரியவில்லை. 

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத மேம்பாலம்.. பொதுமக்களே திறந்துகொண்டனர்!

இதனால், அதிருப்தி அடைந்த வாகன ஓட்டிகள், இன்று தாங்களாகவே அந்த பாலத்தை திறந்துகொண்டனர். பாலத்தின் மீது தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த தார் டின்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர். அதைத்தொடர்ந்து பாலத்தின் மீது போக்குவரத்து தொடங்கியது. கனரக வாகங்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் பாலத்தின் மீது ஓடத் தொடங்கிவிட்டது. தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் பாலம் திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லையில் தச்சநல்லூர் ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகத் திறக்கப்படாத நிலையில், அதனைப் பொதுமக்களே பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். அதேபோல், தற்போது இந்த பாலத்தையும் பொதுமக்களே திறந்து பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...