News
Loading...

சாலையே போடாமல் ரூ.7.33 லட்சம் சுருட்டல் பொதுமக்கள் அதிர்ச்சி

சாலையே போடாமல் ரூ.7.33 லட்சம் சுருட்டல் பொதுமக்கள் அதிர்ச்சி

குலசேகரம் பேரூராட்சி பகுதியில் சாலை பணி நடக்காமலேயே நடந்ததாக கூறி ஒப்பந்ததாரர் பெயரில் ரூ.7.33 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பணிகளுக்கு தீர்மானங்கள் போட்ட பின்னர் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சகஜமாகிவிட்டது. பல இடங்களில் தரமற்ற பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த பணிகள் செய்த சில நாட்களிலேயே சேதம் அடைவதும், அதனை வெளியே தெரியாமல் மறைத்து மீண்டும் அதே வேலைக்கு நிதி ஒதுக்கி மக்கள் பணத்தை விரயமாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதனை சார்ந்த ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர். இதனை மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை. 

இதன் விளைவு தற்போது சாலை போடாமலே போட்டதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பகுதியான பொட்டகுளத்திலிருந்து இடுக்கம்பாறை செல்லும் சாலையில் குலசேகரம் பேரூராட்சி எல்கை வரை சாலை மிக மோசமாக இருந்தது. 

இதனை மேம்பாடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த 12ம்தேதி பேரூராட்சி சாதாரண கூட்டம் நடை பெற்றது. இதில், பொட்டகுளத்திலிருந்து இடுக்கம்பாறை செல்லும் சாலை சீரமைத்ததற்கு ஒப்பந்ததாரருக்கு ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்து 650 வழங்கியதாக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 

சாலை பணி நடைபெறாமலேயே நடைபெற்றதாக கூறி ஒப்பந்ததாரர் பெயரில் பணம் மோசடி செய்யப்பட்டது கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் அதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. சிறிய பிரச்னைகளை பெரிதாக்கி போராட்டங்கள் நடத்தும் கம்யூனிஸ்டுகள் போஸ்டர் ஒட்டியதோடு நிறுத்தி கொண்டனர். 

இந்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வரவே பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு பகுதியில் சாலை செப்பனிட்டதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். பேரூராட்சியின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று ஏராளமான மோசடிகள் செய்திருக்கலாம். எனவே உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.15 லட்சத்திற்கு ரகசிய டெண்டர்

குலசேகரம் பேரூராட்சியில் நடைபெறும் பெரும்பாலான டெண்டர்களும் ஒப்பந்தகாரர்களை அழைத்து பேசி யாருக்கு எந்த பணி என்பதை முன்கூட்டியே நிர்ணயம் செய்து எத்தகைய விளம்பரமும் இல்லாமல் ரகசியமாக நடத்துகின்றனர். இதே போன்று கடந்த வாரம் ரூ.15 லட்சத்திற்கான வளர்ச்சி பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் மாவட்ட செய்திமலர் மற்றும் வெப்சைட்களில் வெளியிடாமல் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சாலை செப்பனிடாமல் செப்பனிட்டதாக கூறப்படும் சாலை பகுதியை நிருபர்களுக்கு காட்டிய குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் சுபாஷ்கென்னடி கூறியதாவது: சாலை செப்பனிடாமல் செப்பனிட்டது போன்று தீர்மானம் நிறைவேற்றி பேரூராட்சி பணம் கையாடல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். 

குலசேகரம் பேரூராட்சியில் எல்லா நிலையிலும் முறைகேடுகள் அதிகம் உள்ளது. குலசேகரம் பகுதிகளில் சுண்ணாம்பு மற்றும் பிளீச்சிங்பவுடர் போடுவதாக கூறி ஆண்டிற்கு பல லட்சம் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதே போன்று மின் உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பேரூராட்சியில் என்ன நடைபெறுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. 

அரசு அறிவிக்கும் எத்தகைய திட்டங்களாக இருந்தாலும் அவை மக்களுக்கும் சரிவர சேருவதில்லை. புகார்கள் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. இத்தகைய முறையற்ற செயல்களால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே உரிய விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.