News
Loading...

ஈஷா நிறுவனம் யானை வழித்தடத்தை ஆக்ரமிக்கவில்லை!

ஈஷா நிறுவனம் யானை வழித்தடத்தை ஆக்ரமிக்கவில்லை!

ஈஷா மையம் குறித்த வழக்கு ஒன்றை முடித்து வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இன்னும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் முடிக்கப்படாமல் இருக்கின்றன.

வழக்கு 1: விதி மீறிய கட்டடங்கள்

1994-ம் ஆண்டு முதல் ‘ஈஷா யோகா மையம்’, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கட்டடங்களைக் கட்டி வருகிறது. 4 லட்சத்து 27 ஆயிரம் ச.மீ., பரப்பில் அவை நிலைகொண்டுள்ளன. அவற்றில், 60 கட்டட பிளாக்குகள், 34 கட்டடங்கள் உள்ளதாக வனத்துறை, கோவை உள்ளூர் திட்டக்குழுமம், உள்ளூர் பஞ்சாயத்து அறிக்கைகளில் இருந்து அறியமுடிகிறது. ஆனால், இவற்றில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று அரசு தாக்கல் செய்த மனுவிலேயே இருப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது

மலைவாசஸ்தலம் மற்றும் மலை அடிவாரங்களில் ஒருவருக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், அதில் அவர்கள் நினைத்த உடன் கட்டடம் கட்ட முடியாது. ‘ஹக்கா’ (Hill Area Conservation Authority-HACA) என்ற மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் முதலில் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட வனச்சரக அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்து, தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும். அவை அனைத்தும் ‘ஹக்கா’ பார்வைக்கு வைக்கப்​பட்டு, அதில் சிக்கல் எதுவும் இல்லாதபோதுதான், அதன் ஒப்புதல் கிடைக்கும். ‘ஹக்கா’ அனுமதி பெற்றபிறகு, வனத்துறை ஒரு ஆய்வை நடத்தி, தடை​யில்லாச் சான்றிதழ் வழங்கும். இந்த நடைமுறை​களுக்குப் பிறகுதான், மலைக்​காடுகளில் கட்டடங்களைக் கட்ட முடியும். ஈஷா யோக மையம் தியான மையம், விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என்று பல கட்டடங்களை எழுப்பி உள்ளது. 2011-ம் ஆண்டு இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. அதன்பிறகு, ஜூலை 20, 2011-அன்று கட்டடம் கட்ட அனுமதி கேட்டு, நகர-ஊரமைப்புத் திட்டக்குழுமத்திடம் (Town and Country Planning) ஈஷா விண்ணப்பித்தது. கட்டடங்களை எல்லாம் கட்டிமுடித்துவிட்டு, கட்டடம் கட்ட அனுமதி கேட்டது ஈஷா. அதிலும், ஏகப்பட்ட குளறுபடிகள். எனவே, அவற்றைச் சரிசெய்து, முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தி ஈஷாவுக்கு நவம்பர் 2012, கடிதம் எழுதப்பட்டது. ஆனால், ஈஷாவிடம் இருந்து முறையான நடவடிக்கை இல்லை. இதையடுத்து, கோவை நகர-ஊரமைப்புத் திட்டக் குழுமம், ஈஷா அனுமதி இல்லாமல் கட்டும் கட்டிடப் பணிகளை நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ஈஷா நிறுத்தவில்லை. இதையடுத்து, ‘ஈஷா யோகா மையம்’ வனப்பகுதியில் கட்டியுள்ள கட்டிடங்களை 3 மாதத்திற்குள் இடித்து பழைய நிலைக்கு அந்த நிலத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு மற்றொரு நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால், ஈஷா அதற்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதுபோல, கட்டடங்களை இடிப்போம் என்று நோட்டீஸ் அனுப்பிய அரசாங்கமும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆகவே, அதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில், வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்குத் தாக்கல் செய்தார்.

ஈஷா நிறுவனம் யானை வழித்தடத்தை ஆக்ரமிக்கவில்லை!

வழக்கு 2 : ஈஷாவுக்கு தடையில்லா மின்சாரம்

2006-2011 காலகட்டத்தில் மின்வெட்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்தது. கொங்கு மண்டலத்தில் பல தொழில்கள் முடங்கின. ஆனால், அந்த நேரத்திலும், ஈஷாவுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. உலக முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்(World Important Institutions) என்ற சலுகையில், ஈஷாவுக்கு இந்தச் சலுகையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்​பட்டது. இதை எதிர்த்தும், வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கைக் தாக்கல் செய்துள்ளார். அதுவும் நிலுவையில் உள்ளது.

வழக்கு 3: அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை! 

‘‘25 ஆண்டுகளாக, விதிமுறைகள் அனைத்தையும் மீறி, அடர் வனத்தில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வர்த்தக நோக்கத்துடன் செயல்படும் அந்த நிறுவனத்தால், வனவிலங்குகள், மனிதர்கள் பாதிப்படைந்து உள்ளனர். வன வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பலமுறை இதை அதிகாரிகள் கவனத்துக்குக்கொண்டு சென்றும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர்கள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் மேலும் ஒரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மூன்று வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன.

ஈஷா தரப்பு பதில் என்ன? 

இந்தத் தொடர் சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் பற்றிய கேள்விகளுக்கு ஈஷா மையத்தின் நிர்வாகி ஏகா  பதில்கள் அளித்துள்ளார்:

‘‘ஈஷா மையம் யானை வழித்தடத்தில், அனுமதி இல்லாமல் கட்டடங்களைக் கட்டிவிட்டு, பிறகு அனுமதி கேட்டு விண்ணப்பித்தாகவும், அதன்பின் அந்த விண்ணப்​பத்தை நீங்களே திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், நீதிமன்றத்தில் வெற்றிச் செல்வன் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளாரே?”

ஈஷா நிறுவனம் யானை வழித்தடத்தை ஆக்ரமிக்கவில்லை!

‘‘இது நீண்டகாலமாகவே ஈஷா மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டு. மண்டல வனப்பாதுகாப்பு காவலர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் 2013-ல் ஈஷா வளாகத்தை ஆய்வு செய்தனர். 25.04.2013 அன்று முதன்மை வனப் பாதுகாவலருக்கு, மண்டல வனப்பாதுகாவலர் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், ஈஷா யோக மையம், பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது, வனப்​பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் ஈஷாவால் செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

HACA  - மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் தங்கள் அறிக்கையில் ஈஷா யோக மையத்தினால் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளின் தாவரங்கள் இதர விலங்கினங்களின் வாழ்வியலுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று தெரிவித்​திருக்கிறது. மேலும், ஈஷா யோக மையம் அமைந்துள்ள பகுதி மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களில் அமையவில்லை. ஈஷா யோகா மையத்தின் பட்டா நிலத்துக்குள் கட்டப்பட்ட கட்டடங்களின் சில பகுதிகளுக்​கான அங்கீகாரம் கோரும் விண்ணப்பம் மேல்முறையீட்டில் உள்ளது. வெற்றிச்செல்வனால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கருத்துத் தெரிவிக்க முடியாது.”

‘‘ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள மின்வேலிகளால், யானைகளும் மனிதர்களும் கணிசமான எண்ணிக்கையில் இறந்திருப்பதாக வனச்சரகர் பார்த்திபன், துறை சார்ந்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாரே?’’

‘‘ஈஷாவில் அமைக்கப்பட்டுள்ளது குறைந்த மின் அழுத்தத்தில், சூரிய சக்தியால் இயங்கும் சூரிய-மின்வேலி. இதனால், மனிதர்களோ விலங்குகளோ இறப்பதற்கு வாய்ப்பே கிடையாது.”

இப்படி சர்ச்சைகளும் விளக்கங்களும் ஈஷாவை சுற்றிலும் மொய்க்கின்றன! 

- ஜோ.ஸ்டாலின், படங்கள்: ச.ஜெ.ரவி

“மின்வேலியால் உயிரிழப்பு!”

வனச்சரக அலுவலர் எம்.எஸ்.பார்த்திபன் 19.01.12 அன்று மாவட்ட வன அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “சாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையே உள்ள யானைகள் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளது. ஈஷா மையத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகிறார்கள். காட்டுப் பாதையை அவர்கள் பயன்படுத்துவதால், காட்டு விலங்குகளும் காடுகளும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், நூற்றுக்கணக்கான பணியாட்களும், கனரக வாகனங்களும், எந்திரங்களும் கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதால், காட்டு விலங்குகளுக்கும், யானைகள் வழித்தடமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. அங்கு, மின்வேலி அமைக்கப் பட்டிருப்பதால், வயல்களுக்குள் யானைகள் புகுந்து, பயிர்கள் நாசமாகின்றன. உயிரிழப்புகள் ஏற்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.