News
Loading...

சோலார் ஆட்டோ! எரிபொருள் செலவு ஜீரோ!

சோலார் ஆட்டோ! எரிபொருள் செலவு ஜீரோ!

பெட்ரோல் வாகனங்களால், நமக்கு அதிக செலவு வைப்பதை விட, சுற்றுச்சூழலுக்கும் அதிக கேடு விளைவிக்கின்றன. வருங்காலத்தில் எரிபொருள் அத்தனையும் தீர்ந்துவிடலாம் என்பதால், அதற்கான மாற்றுவழிகளைக் கண்டறிய வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்த முயற்சியில் உலகம் முழுக்க, பல மாற்று எரிபொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அத்துடன் நாளுக்கு நாள் சந்தையில் கண்டுபிடிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சூரியசக்தியில் (சோலார்) இயங்கும் ஆட்டோ ஒன்றை, காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும், பேராசிரியர் எஸ்.தேவநேயன் உருவாக்கி உள்ளார். கிராமிய எரிசக்தி மையத்தில் ஆராய்ச்சியியல் படிப்பு படிக்கும் தேவநேயன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த 'சோலார் ஆட்டோ ரிக்ஷா' -வை வடிவமைத்துள்ளார்.

பேராசிரியர். எஸ்.தேவநேயன்

இதுபற்றி பேராசிரியர். எஸ்.தேவநேயன் பேசும்போது, "வெளிநாடுகளுக்கு செல்லும்போது மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ மாதிரியான வாகனத்தை அடிக்கடி பார்ப்பதுண்டு. நம் நாட்டிலும் ஆட்டோக்களின் எண்னிக்கை அதிகமாகவே உள்ளது. நாமும் இதுபோன்ற வாகனங்களை கண்டுபிடிக்கலாமே என்ற எண்ணம் எனக்கு வந்தது. வெளிநாடுகளில் இதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது. நான் மிகக் குறைந்த செலவில் வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்க ஆரம்பித்தேன். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமிடம் என்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றி சொன்னேன். அதற்கு அவர் எல்லா மூலப்பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றார். அதன்படியே தயாரித்த இதன் விலை ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த 'சோலார் ஆட்டோ'வில் மூன்று பயணிகளுடன் ஒரு ஓட்டுநரும் சேர்ந்து மொத்தம் 4 பேர் பயணம் செய்யலாம். 

சோலார் பேனல்களில் இருந்து பெறப்படும் சூரிய மின்சக்தி ஒரு பேட்டரியில் சேகரிக்கப்பட்டு, இன்னொரு பேட்டரியில் அதன் இன்ஜின் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இயந்திர மின் தேவையும் பூர்த்தியாகும், பேட்டரியும் ரீசார்ஜ் ஆகிவிடும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். தற்போது புழக்கத்தில் உள்ள டீசல், பெட்ரோல் ஆட்டோக்கள் வாங்க சுமார் 1,75,000 ரூபாய் ஆகிறது. ஆனால் சோலார் ஆட்டோவை ரூ.1 லட்சத்தில் தயாரித்து விடலாம். டீசல், பெட்ரோல் ஆட்டோ வைத்திருப்பவர்கள், பெட்ரோல், டீசல் செலவழித்து மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் வருமானம் ஈட்டுகின்றனர். சோலார் ஆட்டோவில் டீசல், பெட்ரோல் செலவு இல்லாமல் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம். மேலும் இதன் பயன்பாட்டால் சூழல் மாசும் ஏற்படாது. 500 வாட்ஸ் திறனுள்ள சோலார் பேனல்கள் மூலம் 32 வோல்ட் முதல் 72 வோல்ட் மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஒரு 'குதிரைத் திறன்' அளவுள்ள இன்ஜின் மூலம் இந்த ஆட்டோ இயங்கும். வேகத்தை இயக்கும் எலக்ட்ரிக்கல் கியர் பாக்ஸ் அமைப்பு கொண்ட சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேகத்தை எளிதாக கூட்டவும் குறைக்கவும் முடியும்." என்றார்.

சோலார் ஆட்டோ! எரிபொருள் செலவு ஜீரோ!

பல்கலைக்கழகத்தின் மரபுசாரா எரிசக்தி மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருபாகரன் பேசும்போது, ‘சாதாரண வாகனங்களால் சுற்று சூழல் மாசுபாடு அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்த ஆட்டோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கி.மீ வேகத்தில் இயங்கும். இந்த ஆட்டோ ரிக்ஷாவினை உருவாக்கி 2 முதல் 3 வருடங்கள் ஆகின்றன. மேலும், சோலார் ஆட்டோ ரிக்ஷாவின் கட்டுப்பாடுகளை தளர்த்தினால், மக்களிடம் எளிதாக எடுத்துச்செல்லலாம். இந்த வாகனத்தில் கியர் இல்லை. எடை குறைவான பொருட்களை கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.