News
Loading...

மனைவியை மாநகராட்சி மேயராக ஆக்குவதற்காக வீடுவீடாகத் திருடிய நபர் கைது

மனைவியை மாநகராட்சி மேயராக ஆக்குவதற்காக வீடுவீடாகத் திருடிய நபர்

தன் மனைவியை மாநகராட்சி மேயராக ஆக்குவதற்காக வீடுவீடாகத் திருடிய நபர் ஒருவர் போலீஸில் சிக்கியிருக்கிறார். யார் அந்த நபர்? அவர் எப்படி சிக்கினார்? 

சென்னை ஆழ்வார் திருநகர் விரிவுப் பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான குமாரதேவன். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் வீட்டில் தனியாக வசித்தனர். கடந்த 16.7.2016 அன்று மதியம் 2 மணி அளவில் குமாரதேவன் வீட்டுக்கு ஒரு நபர் வந்தார்.  தன்னை மாநகராட்சி அதிகாரி என்று அறிமுகப்​படுத்திக் கொண்டு சொத்து வரி, குடிநீர் வரி தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளார். வரி கட்டியதற்கான ரசீதுகளை குமாரதேவன் காண்பித்து இருக்கிறார். அதன் பிறகு, வீட்டின் பின்பக்கம் உள்ளிட்ட இடங்களை ஆய்வுசெய்த அந்த நபர், அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  இரண்டு நாட்கள் கழித்து, பீரோவைத் பார்த்த குமாரதேவனுக்கு பயங்கர அதிர்ச்சி. பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டுப் போயி​ருந்தது. அதுதொடர்பாக, விருகம்பாக்கம் போலீஸில் குமாரதேவன் புகார் கொடுத்தார்.

மனைவியை மாநகராட்சி மேயராக ஆக்குவதற்காக வீடுவீடாகத் திருடிய நபர்

“திருடு நடந்த வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அதன் மூலம்,  திருடிய நபர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டோம். வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திப்பட்டுவைச் சேர்ந்த கணேசன் என்பவர்தான், தன்னை மாநகராட்சி அதிகாரி என்ற போர்வையில் குமாரதேவன் வீட்டில் திருடியிருக்கிறார். இதற்கு முன்பாகவே, பல வீடுகளில் அவர் திருடியிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன” என்று கூறிய விருகம்பாக்கம் போலீஸார், மேலும் தொடர்ந்தனர்.

“வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க மாணவர் அணி அமைப்பாளராக கணேசன் இருந்துள்ளார். கணேசனின் மனைவி சுவிதாவும் தே.மு.தி.க கட்சியை சேர்ந்தவர். மேலும் அவர் பேரணாம்பட்டு ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். திருட்டு வழக்குகளில் கைதானதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கணேசனிடம் விசாரித்தபோது, தன்னுடைய மனைவியை வேலூர் மேயராக்​கவே தேர்தல் செலவுக்கு பணம் சேர்க்க வீடுகளில் திருடியதாகக் கூறினார். கணேசனின் கூட்டாளி காந்திராஜனுக்கும், அவருடைய மனைவி மல்லிகாவுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் மல்லிகாவை கைது செய்துள்ளோம்” என்றனர்.

மனைவியை மாநகராட்சி மேயராக ஆக்குவதற்காக வீடுவீடாகத் திருடிய நபர்

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கணேசன் மீது சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. அவரிடமிருந்து இதுவரை 160 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளைக் குறிவைத்து கொள்ளை அடிப்​பதே கணேசனின் ஸ்டைல். குமாரதேவன் வழக்கில்கூட சி.சி.டி.வி-யில் கணேசன், அவருடைய கூட்டாளிகள் காந்திராஜன், மல்லிகா ஆகியோர் ஆட்டோவில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. கணேசன், மாநகராட்சி அதிகாரிபோல நடிப்பார். காந்திராஜன், கொள்ளையில் ஈடுபடுவார். நோட்டம் பார்ப்பது மல்லிகாவின் வேலை. மல்லிகா இல்லை என்றால் சில நேரங்களில் கணேசனின் மனைவி கவுன்சிலர் சுவிதாவும் வருவாராம். கொள்ளை அடித்த பணத்தில், துத்திப்பட்டு கிராமத்தில் மூன்று மாடி ஆடம்பர பங்களாவை கணேசன் கட்டியுள்ளார்” என்றார்.

அரசியல்வாதிகள் அடுத்த லெவலுக்குப் போய்விட்டார்களோ?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.