News
Loading...

இதுவரை ஜெயா அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது ஏன்?

இதுவரை ஜெயா அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது ஏன்?

கர்நாடக மாநில முதல் அமைச்சர், திரு. சித்தராமையா அவர்கள், காவிரி பிரச்சினையையொட்டி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்த பிறகு, தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் கூட தர முடியாது என்றும், தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைச் சந்திக்கத் தயார் என்றும் அறி வித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் விஷயத்தில் கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே சர்ச்சை ஏற்படுவது வழக்கமாகி விட்டது. 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஆகஸ்ட் மாதத்தில் திறந்து விட வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டுமென்று உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை வரும் செப்டம்பர் 2ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதி மன்றமும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள செய்தி கிடைத்ததும், கர்நாடக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நேற்று பெங்களூரு விதான்சவுதாவில் தனது தலைமையில் கூட்டி யிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அமைச்சர்கள் டி.வி. சதானந்த கவுடா, ஆனந்த் குமார், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில அமைச்சர்கள், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டப் பேரவை ம.ஜ.த. தலைவர் எச்.டி. குமாரசாமி, நாடாளுமன்ற உறப்பினர்கள் எம். வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு பற்றி விவாதித்திருக் கிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினையே உச்ச நீதி மன்றத்தில் பதில் மனுவாகத் தாக்கல் செய்வோம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 5,912 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் கூட கிடைக்காது என்பதால், மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன. 

பெங்களூருவில் 15-8-2016 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணைக்கட்டுத் திட்டம் பற்றி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதென்றும், மழைக் காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது என்றும், இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கப்படும் என்றும் பேசினார்.

கர்நாடக மாநில முதல்வரின் பேச்சை ஏடுகளில் படித்ததும் நானும், எதிர்க் கட்சித் தலைவர்களும் தான் பதில் சொன்னோம். ஆனால் நமது முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொன்னார்? உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகச் சொன்னார். 

காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது பற்றி கடந்த டிசம்பர் மாதமே, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா “காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்தியும் வந்தது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால், காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்டப் போவதாகவும், இதன் தொடர்ச்சியாக கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளுக்குக் கீழே நான்கு தடுப்பு அணைகள் கட்டி, பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் போவதாகவும், காவிரி கர்நாடக மாநிலத்திற்குள்ளே ஓடும்போது அதைப் பயன்படுத்திடக் கர்நாடகத்திற்கு முழு உரிமை உள்ளதால் தமிழக அரசோ, தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது என்றும் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கடந்த ஆண்டு நவம்பரில் தெரிவித்த போதே, அதைப் பற்றி நான் விரிவான கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருந்தேன். 

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, மேகதாது பிரச்சினையில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு, ஒன்றிணைந் திருக்கிறார்கள். அந்த மாநில முதலமைச்சர் தனக்கே எல்லாம் தெரியும், தனக்கு யாருடைய தயவும் தேவையில்லை என்று ஆணவமாக எண்ணாமல், அவ்வப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, மற்ற கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்கிறார். ஆனால், தமிழகத்திலோ, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திடுக” என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இங்குள்ள ஆட்சியினர் தயாராக இல்லை. பிரச்சினை என்றால் உடனே, முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவார்; சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தால் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவார்; இல்லையென்றால் நேரடியாகவே நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திடுவார். தன்னைச் சுற்றியே தமிழகம் இயங்க வேண்டும் என்றெண்ணிடும் முதலமைச்சர் இங்கே!

தற்போது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. மற்றொரு போராட்டம் 30ஆம் தேதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டத்தையொட்டி நடைபெறவுள்ள சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் வெற்றிகரமாக நடந்தேற கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஒத்துழைத்திட வேண்டுமென்று நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளேன். அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையாவது அழைத்து அரசின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. மக்களை மதித்துப் போற்றும் ஜன நாயக ஆட்சி தமிழகத்திலே இல்லை; எல்லாம் சர்வாதிகாரத் தர்பார், தன் முனைப்பு!

கர்நாடக மாநிலத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்துக் கட்சிக் குழுவினருடன் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி அவர்களையும், மற்ற அமைச்சர்களையும் நேரடியாகச் சந்தித்து மேகதாது திட்டம் குறித்துப் பேசி யிருக்கிறார்கள். அதற்குப் பிறகாவது, இந்தப் பிரச்சினையிலே உண்மையான அக்கறை ஆளுங்கட்சிக்கு இருந்திருக்குமேயானால், தமிழகத்திலே உள்ள விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்குமேயானால், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழக அரசின் சார்பில் பிரதமரைச் சந்தித்திருக்க வேண்டாமா? 

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நான் அறிக்கை விடுத்தேன். அதற்கான காசோலையைப் பெறக் கூட தமிழக அரசினர் எவ்வளவு அலட்சியமாக இருந்தார்கள் என்பதை தமிழகம் நன்கறியும். இன்னும் சொல்லப் போனால், பீகார் மாநில முதலமைச்சர் ஐந்து கோடி ரூபாய் அந்த மாநிலத்தின் சார்பாக நிவாரண நிதியை வழங்குவதாகவும், ஒடிசா மாநிலத்தின் சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்குவதாகவும் அறிவித்தார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்ய கர்நாடக அரசு தயாராக இருந்தும், அதற்காக அந்த அரசின் அதிகாரி தமிழக அரசின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அதைப் பெறுவதற்கு தமிழக அரசு இழுத்தடிப்பதாகவும் அப்போதே செய்திகள் வந்ததை மறந்திருக்க முடியாது. 

இன்னும் சொல்லப் போனால், தமிழக மக்களின் எந்தப் பிரச்சினைக்காக வாவது தமிழக ஆளுங்கட்சி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்தினைப் கேட்டறிந்திருக்கிறதா? மாநிலத்தைப் பாதித்திடும் மிக முக்கியப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளையும், எல்லா பிரிவு மக்களையும் அரவணைத்து பொதுக் கருத்து - பொது நோக்கம் - பொதுப் பாதை உருவாக்கத் தவறிவிட்ட, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான இவர்களின் தான்தோன்றித்தனமான நடைமுறைகள் பற்றி நன்கு அறிந்த அண்டை மாநில மக்கள் மேகதாதுவில் அணை கட்டுவோம், காவிரியில் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடகமும், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவோம் என்று ஆந்திராவும், சிறுவாணியில் அணை கட்டுவோம் என்று கேரளாவும் கூறுகிறார்கள். மொத்தத்தில் பாழ்பட்டு வருவது தமிழகமும், பாதிக்கப்படுவது தமிழ் மக்களும்தான்! ஆளும் அ.தி.மு.க. வினரோ எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்று, எல்லாவற்றையும் அலட்சியப் படுத்தி ஒதுக்கி விட்டு, தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே நேரத்தையும், நினைப்பையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது, அண்ணா வழியில் “ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.