News
Loading...

காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும்: நாசர், விஷால் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், மற்றும் பிரசன்னா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், பூச்சி முருகன், உதயா, நந்தா, குட்டி பத்மினி, நிரோஷா, கோவை சரளா, லலிதா குமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் நாசர், விஷால் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நடிகர் சங்க செயற்குழுவில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?

விஷால்:- காவிரி பிரச்சினை குறித்து விவாதித்தோம். இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வைத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி. தமிழக முதல்வரை சில கன்னட நடிகர்கள் தவறாக விமர்சித்து உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்று தருவதில், ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட்டு இருக்கிறார். காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும். கோர்ட்டு தீர்ப்பின்படியே எல்லா விஷயங்களும் நடக்கின்றன. ஆனால் கர்நாடகத்தில் தமிழக முதல்வரின் கொடும்பாவியை எரிப்பது, அவரை தவறாக விமர்சனம் செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது கண்டனத்துக்குரியது.

கேள்வி:- காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்துமா?

நாசர்:- நடிகர் சங்கம் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. திரையுலகின் அனைத்து சங்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம். கன்னட நடிகர்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தவேண்டும் என்று போராடுகிறார்கள். அவர்களை போல் நாம் போராட முடியாது. எங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாக போராட்டம் அமையும்.

கேள்வி:- நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து கருணாஸ் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறதே?

கருணாஸ்:- சமூக வலைதளங்களில் தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். நான் என்ன நினைத்தேனோ, அது நடிகர் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

கேள்வி:- நடிகர் சங்கம் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளதே?

கருணாஸ்:- நடிகர் சங்கத்தின் மீது விளம்பரம் தேடுவதற்காக குற்றம் சுமத்தி வருகிறார்கள். நடிகர் சங்கத்தில் அரசியல் இல்லை. இது கலைஞர்களின் சங்கம். இந்த சங்கத்தின் கணக்குகள் வெளிப்படையாக உள்ளன. எந்த தவறும் நடக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் பேட்டியில் தெரிவித்தனர்.

நடிகர் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

நதிகள் உற்பத்தியாகும் இடத்தை விட அது வந்து சேரும் இடத்தை சார்ந்தவர்களுக்கே உரிமை அதிகம் என்பது உலக விதி. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது முறையல்ல. இருப்பதை பகிர்ந்து கொள்வோம் என்ற சிந்தனையோடு அந்த மாநிலம் செயல்பட வேண்டும்.

நடிகர் சங்கம் எப்போதுமே தமிழர்களுக்கும் இந்திய உணர்வுகளுக்கும் பிரச்சினை வரும்போது குரல் கொடுக்க தயங்கியது இல்லை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.