News
Loading...

ஒபாமாவின் முதல் டேட்டிங்

மற்றவர்களின் காதல் கதையைப் போல சுவாரசியமானது வேறு எதுவும் இல்லை. அதுவே பிரபலங்களின் கதையாக இருந்து விட்டால் சுவாரசியத்துடன் சர்ச்சைகளுக்கும் குறைவே இருக்காது. ஹாலிவுட்டில் எப்பாடு பட்டாவது அந்தக் கதையைப் படமாக எடுத்து விடுவார்கள். இதற்குத் தப்பித்தவர்கள் யாருமே இல்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கும் மிஷெலுக்கும் இடையிலான காதல் கதை ‘சவுத்சைடு வித் யு’ என்ற பெயரில் திரைப்படமாக சத்தமில்லாமல் வெளிவந்திருக்கிறது.

ஒபாமாவின் முதல் டேட்டிங்

ஒருவரின் வாழ்நாளிலேயே அவரது வாழ்க்கை வரலாறு படம் வெளியாவது பலருக்கும் பலவிதமான சங்கடங்களைத் தரும். ஆனால் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, அவரின் காதல் குறித்த படம் வெளியாகியுள்ளது பெரிய ஆச்சரியம்தான். இந்த மாதிரியான நிகழ்வுகள் எல்லாம் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம்.

சிகாகோ நகரின் தெற்குப் பகுதி யில் 1989ம் ஆண்டு, மிஷெல்லுடன் ஒபாமா முதன்முதலில் டேட்டிங் சென்ற நாளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒபாமா, மிஷெல்லிடம் காதல் வசப்பட்டு அவரைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் தன் கீழ் பணிபுரியும் ஒபாமாவை மிஷெல் தவிர்க்கப் பார்க்கிறார். ஒபாமாவுக்காக இன்னொரு இளம் பெண்ணை ஏற்பாடு செய்யவும் மிஷெல் முயற்சிக்கிறார். இப்படி சுவாரஸ்யமாக, நகைச்சுவையாகச் செல்கிறது படம்.

பார்க்கர் சாயர்ஸ் ஒபாமாவாகவும், டிகா சம்ப்டெர் மிஷெல்லாகவும் நடித்துள்ளனர். ரிச்சர்டு டன்னே திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார். சுமார் இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வுக்காக, ஒபாமா ஜோடி சுற்றிய இடங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டியுள்ளார் இயக்குநர். ஆனால் ஒபாமா ஜோடியிடம் அன்றைய நிகழ்வுகளைப் பற்றி எதுவும் அவர் கேட்கவே இல்லை. பதினைந்தே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார். 

‘‘நீங்கள் எந்தவிதமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவராக இருந்தாலும், இது அரசியல் படமல்ல. ஒரு அற்புதமான ஜோடியின் ஆரம்ப காலத்தைச் சொல்கிறது இந்தப் படம். காதலில் விழுந்த எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியும். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சிரிப்பில் தங்களை மறந்துபோவார்கள்’’ என்று டிகா சம்ப்டெர் கூறுகிறார். சுமார் 800 திரையரங்குகளில் வெளியாகி யுள்ள இப்படம், முதல் வார பாக்ஸ் ஆபீஸில் 3 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூல் செய்துள்ளது. அமெரிக்க ரசிகர்கள் ‘சவுத்சைடு வித் யு’வின் மீது காதலில் விழவில்லை போலிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.