News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - மீனம்

புரட்டாசி மாத ராசி பலன் - மீனம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

அடிப்படை வசதிகள் பெருகும் நேரம்!

வெளியிடும் வார்த்தைகளால் விரோதம் வளரக்கூடாது என்ற யோசித்துப் பேசும் மீன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கின்றார். பஞ்சம ஸ்தானாதிபதி சந்திரனை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பார்க்கின்றார். எனவே குருச்சந்திர யோகம் செயல்படும் மாதமிது. வருமானம் திருப்தி தரும். தளர்ச்சி ஏற்பட்ட தொழில் இனி விறு விறுப்பாக நடைபெறும்.

தனாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய தொழிலில் இருந்த தடைகள் அகலும். பங்குதாரர்களைக் கூடுதலாக சேர்த்து ஒருசிலர் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவர். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். சூரிய பார்வை உங்கள் ராசியில் பதிவதால் அரசுவழி அனுகூலம் உண்டு. வங்கிகளின் ஒத்துழைப்பு இதுவரை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது சலுகைகள் கிடைக்கப்பெற்ற சந்தோஷம் காண்பர்.

உத்தியோக ஸ்தானத்தில் புதன் ராகுவோடு சஞ்சரிக்கின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பதால் இதுபோன்ற காலங்களில் அலுவலகப் பணிகளில் ஆதாயம் கூடுதலாக கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து நீங்கள் விலகுவதாகச் சொன்னால் கூட மேலதிகாரிகள் உங்களை விடுவிக்க மறுப்பர். வேண்டுமானால் கூடுதலாகச் சம்பளம் தருகின்றோம், இங்கேயே நீங்கள் தொடர்ந்து இருங்கள் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அனுகூலமான நேரமிது. காரணம் குருவின் பார்வை தான்.

6–ல் ராகு இருந்து குருவும் கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் செயல்படும் என்பார்கள். எனவே அப்படிப்பட்ட ராகுவை திருப்திப்படுத்த சர்ப்ப தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் ராகுவிற்குரிய தெய்வமாக விளங்கும் துர்க்கையை இம்மாதம் நவராத்திரி விழாவில் நாம் கொண்டாடுகின்றோம். அந்த நவராத்திரியில் நீங்கள் கலந்து கொண்டு அம்பிகையின் முழு அருளுக்கும் பாத்திரமாகலாம்.

மாதக் கடைசியில் விருச்சிக சுக்ரனின் சஞ்சார காலத்தில் வியக்கும் தகவல் வீடு வந்து சேரும். சென்ற மாதத்தில் இழந்த இழப்புகனை ஈடுசெய்ய புதிய வழிபிறக்கும். பணியாளர் மாற்றங்களால் பரவசமடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். எனவே உற்சாகத்தோடு பணி புரிய ஏற்ற விதத்தில் இம்மாதம் அமையப் போகின்றது.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரிகளிடம் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். வாகனங்களால் தொல்லைகளும், விரயங்களும் ஏற்படலாம். வாகன மாற்றங்கள் செய்ய அடிகோலும் நேரம் இது. பூமி வாங்கியதில் பத்திரப் பதிவில் தாமதங்கள் ஏற்படலாம். மேலும் வில்லங்கம் இல்லாத இடங்களா? என்பதை பார்த்து வாங்குவது நல்லது.

உச்ச புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 4–ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறப் போகின்றார். களத்திர ஸ்தானம் பலமடைகின்றது. மணமாலை சூடும் வாயப்பும், மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பும் ஒரு சில குடும்பங்களில் ஏற்படும். மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு தக்க விதத்தில் ஆதாயம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே இடமாறுதல்கள் கிடைக்கும். தெசபுத்தி பலம்பெற்றவர்களுக்கு அன்னிய தேசத்திலிருந்து கூட அழைப்புகள் வரலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் நல்ல முடிவிற்கு வரும். பலமுறை பஞ்சாயத்து வைத்தும் சொத்துப் பிரச்சினை தீரவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சி காணப் போகின்றார்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நிறைவேற்ற எடுத்த முயற்சி கைகூடும். சுக்ரன் சனியோடு இணைவதால் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு, நவராத்திரி விழாவில் முப்பெரும் தேவியரையும் வழிபட்டு முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். 

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

குரு பார்வையோடு பிறக்கும் இம்மாதத்தில் கூடுதல் நன்மை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். அக்கம் பக்கத்து வீட்டரின் பகை மாறும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளின் வெளிநாட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுப்பீர்கள். உங்கள் பெயரிலேயே வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டாகும். புது உத்யோகத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வேதனை தீரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பொதுநலத்தில் இருந்தவர்களுக்கு இழந்த பதவியை மீண்டும் பெறுவர். நவராத்திரி நாயகியை வழிபட்டு நலங்களையும், வளங்களையும் வரவழைத்துக் கொள்ளுங்கள்.

பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள் செப்டம்பர்: 19, 20, 24, 25 அக்டோபர்: 5, 6, 7, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.