News
Loading...

லோக் ஆயுக்தா என்றால் என்ன?

பெரும்பாலானோர் வறுமையில் வாடும் பொது அரசியல் வாதிகள் மட்டும் சுக போகத்தில் திளைப்பதை காணமுடிகிறது.

இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவு மனித வளம் மற்றும் இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. இத்தனை வளங்களும் வாய்ப்புகளும் இருந்தும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமாது அதிகார மட்டத்தில் உள்ள ஊழலும் லஞ்சமும் ஆகும். இன்று நாட்டிலுள்ள மக்களின் பெரும்பாலானோர் வறுமையில் வாடும் போது அரசியல் வாதிகள் மட்டும் சுக போகத்தில் திளைப்பதை காணமுடிகிறது.

அருண் சென் குப்தா கமிட்டி அறிக்கை நாட்டிலுள்ள வறுமை கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 74.7% என்று கூறுகிறது. இது போன்ற பசியிளிருந்தும், கல்வியின்மை, சுகாதாரச் சீர்கேட்டை விட்டும் இந்திய பூர்வீக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது? அரசியல்வாதிகளும் அடிகாரவர்க்கத்தினரும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் இந்த கருப்பு பணத்தை சுவீஸ் போன்ற வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். 

GLOBAL FINANCE INSTITUTE அறிக்கையின்படி கடந்த 59 வருடத்தில் 211 பில்லியன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17.7% அளவிற்கு மொத்த உற்பத்தியில்(Gross Total Production) இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதன் மூலம் 211 பில்லியன் டாலர் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. இது இந்தியாவில் முறையாக செலவழிக்கப்பட்டிருந்தால் ஏகப்பட்ட கடன் அடைக்கப்பட்டிருக்கும்.
லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாத்தும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம். 

இந்த விசாரணை மன்றம் முதன்முதலில் 1809- ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் பல நாடுகள் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தன. இந்தியாவில் 1996 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ADMINISTRATIVE REFORMS COMMISSION (ARC) என்று சொல்லப்படும் நிர்வாக மறு ஆய்வுக் குழு, இந்தியாவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை விசாரிக்கவும், பொது மக்களை அதன் கண்காணிப்பாளர்களாக ஆக்கவும் இரண்டு பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. அதில் ஒன்று, மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் போது அவர்களை விசாரிப்பதர்க்கென தனியொரு விசாரணை மன்றம் "லோக்பால்" அமைக்க வேண்டும். 

இரண்டாவதாக, மாநில அளவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை கண்காணிக்க "லோக் ஆயுக்தா" எனும் விசாரணை மன்றத்தை அமைக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை மேற்கண்ட குழு அரசுக்கு சமர்ப்பித்தது. இதில் "லோக் பால்" இன்று வரை சட்டமாக்கப்படவில்லை. அதற்க்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. லோக் ஆயுக்தா மசோதா ஏற்கப்பட்டு பல்வேறு இந்திய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா(1971), பீகார்(1973), ராஜஸ்தான்(1973), உத்திரபிரதேசம்(1975), மத்திய பிரதேசம்(1981), ஆந்திரா(1983), ஹிமாச்சல் பிரதேசம்(1983), கர்நாடகா(1985), அஸ்ஸாம்(1986), குஜராத்(1986), கேரளா(1988), பஞ்சாப்(1985), டெல்லி(1996), ஹரியான(1996) ஆகியவை உள்ளன. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும். விசாரணையில் ஏதேனும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கீழ்காணும் முறைகளில் தண்டிக்கப்படலாம். 

அதாவது அரசு அலுவலர்களின் அதிகாரத்தை குறைத்து பதவியிறக்கம் செய்தல், கட்டாய ஒய்வு அளித்தால், வேலையை விட்டு நீக்குதல், ஆண்டு சம்பள உயர்வு விகிதத்தை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை லோக் ஆயுக்தா நிறுவனம் அரசுக்கு அளிக்கும்.மாநில அரசானது இந்த பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது மாற்றலாம். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மாநில உயர்நீதி மன்றம் அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகலாம். இச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுவது முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது. 

உதாரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தவறிழைத்த அதிகாரிகளின் பெயர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னும் வெளியிடப்படுவதில்லை.
லோக் ஆயுக்தாவின் அதிகாரிகளை மாநில கவர்னர் நியமனம் செய்கிறார். மேலும் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பெற வேண்டும். லோக் ஆயுக்தாவின் நிர்வாகிகளாக பாராளுமன்ற உறுப்பினரையோ, சட்ட மன்ற உறுப்பினரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது. 

லோக் ஆயுக்தா சட்டங்கள் மாநிலத்திற்க்கேற்ப மாறுபடுகின்றன. டெல்லியில் உள்ள சட்டத்தின்படி முறையான புகார் கொடுக்கப்பட்டால், மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள், மாநகர மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர்கள், ஆகியோரை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது அதிகாரிகளின் ஊழல், ஒருசார்பு நிலை, அடக்குமுறை, நேரிதவறுதல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஆகியவை குறித்து உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம். 

எந்த ஒரு தனி மனிதரும், அவர் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பின் அவர் வழக்கு தொடுக்க முடியும். அதிகாரவர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் இந்தச் சட்டம் தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்பதே நாட்டின் நலனில் அக்கறை உடையவர்களின் எதிர்பார்ப்பு. லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் அவா.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.