News
Loading...

பீர், பரோட்டா, சிக்கன் பரிசுக்காக உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள்

பீர், பரோட்டா, சிக்கன் பரிசுக்காக உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள்

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே அரங்கேறி வந்த பைக் ரேஸ், இப்போது குமரி மாவட்டத்திலும் பரவலாக அரங்கேற தொடங்கி விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த மோகம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாகர்கோவில் நகரை பொறுத்தவரை செட்டிக்குளம் முதல் சங்கு துறை பீச், கேப் ரோடு, திருவனந்தபுரம் - பார்வதிபுரம் சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகள் தான் மாணவர்களின் மைதானமாக மாறி உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் போட்டி போட்டு பைக்குகளில் பறந்த வண்ணம் உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு பீர், பரோட்டா, சிக்கன் தான் பரிசாக அளிக்கப்படுகிறது. 

இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப உயிரை பணயம் வைத்து இவர்கள் பைக்கில் பறந்த வண்ணம் உள்ளனர். இதன் விளைவு இவர்களின் உயிருக்கு மட்டுமல்ல, சாலையில் நடந்து செல்லும் சாமானிய, அப்பாவிகளின் உயிர்களையும் பலி வாங்கி விடுகிறது. பைக் மோதி நடக்கும் பல விபத்துக்களின் பின்னணியில் இருப்பது பைக் ரேஸ்கள் தான். பெரும்பாலும் வசதி படைத்த மாணவர்கள் தான் இதில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் இவை அதிகளவில் அரங்கேறுகின்றன. நெருக்கடியான வேலை பளுவால் இது போன்ற பைக் ரேஸ்களை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை. அப்படி ஏதாவது ஒருவர் சிக்கினாலும் கூட, மாணவர் என்ற போர்வையில் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாகி விடுகிறது.

அதிக சி.சி. திறன் கொண்ட பைக், நவீன மாடல்கள் போன்றவை மாணவர்களின் கவனத்தை, ஈர்ப்பதால் பெற்றோர்களும் விலையை பற்றி கவலைப்படாமல் மிக உயர்ந்த ரகம் என்ற பெயரில் நவீன பைக்குகளை வாங்கி கொடுக்கின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலமே இடிந்து விழுகிறது என்பதை அவர்களின் பெற்றோரும் உணருவதில்லை. லைசென்ஸ் இல்லாமல், சாலை விதிகள் பற்றி தெரியாமல் கண்மூடித்தனமாக சாலையில் சென்று பலியாகும் நிலைக்கு பெற்றோரே அடித்தளம் அமைத்து கொடுப்பது போன்ற நிலை உருவாகி உள்ளது. நாகர்கோவில் நகரை பொறுத்தவரை குறுகிய சாலை, அதிக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் உயர் ரக பைக்குகளில் பறக்கும் இளசுகளால், சாதாரணமாக நடந்து செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. 

இது தொடர்பாக கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினருமான தாமஸ் கூறியதாவது :
சாலை விபத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கின்றன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி உள்ளூர் சாலைகளிலும் விபத்துக்கள் நடக்கிறது. சமீப காலமாக நவீன பைக்குகளின் மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 520 சி.சி. திறனுக்கு மேல் கொண்ட பைக்குகளும் வந்து விட்டன. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு இதை எளிதாக வாங்கி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சாலை கமிட்டி கூட்டத்திலும் இந்த பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. முதலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதி வேகம், அதிக ஆபத்து என்பதை உணர்த்த வேண்டும். 

நகர எல்லைக்குள் அதிக சி.சி. திறன் கொண்ட பைக்குகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை கட்டுப்பாடு விதிக்கலாம். ஏனெனில் நாகர்கோவில் நெருக்கடி மிகுந்த பகுதி ஆகும். அதிக விபத்துக்கள் நடக்கின்றன. குடிபோதையில் வருபவர்களை பிடிக்க காவல் துறைக்கு நவீன வசதி எதுவும் இல்லை. வாயை ஊத சொல்லி தான் இன்னமும் பிடிக்கிறார்கள். அவர்களுக்கு நவீன கருவி வழங்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். நகரின் முக்கிய எல்லைகளில் சாலை விபத்துக்கள், அதனால் நிகழ்ந்த உயிர் பலிகள் பற்றி அனைவருக்கும் தெரியும் வகையில் காவல் துறை விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் பைக், கார் ஓட்ட யாரையும் அனுமதிக்க கூடாது. போதிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டால் இந்த பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண முடியும் என்றார். 

மதுவுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் மது போதையில் சிக்குபவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 8 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என காவல்துறையினர் கூறுகின்றனர். எது எப்படியோ? ஒரு மாணவனின் உயிரிழப்பு அவனது பெற்றோருக்கு மட்டுமல்ல, இந்த சமுதாயத்துக்கும் பேரிடியாகும். இது தவிர சாலை விபத்துக்களில் கை, கால்களை இழந்து வாழ்க்கையில் முடமாகி கிடப்பதும் மிகப்பெரிய வேதனை ஆகும். எனவே மாணவ சமுதாயம் மற்றும் இளைஞர் சமுதாயத்தினர் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற பெயரில் பைக், மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட அனுமதிக்க கூடாது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடும். வேகத்தை விட விவேகம் மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

3 மாத சிறை தண்டனை கிடைக்கும்

காவல்துறையினர்  தினமும் வாகன சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்கிறார்கள். குறிப்பாக லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டும் இளம் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கு, நாகர்கோவிலில் உள்ள இளம் சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் சிக்கும் இளம் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் தண்டனை, அபராதம் உண்டு். சிறார்களின் அபராத தொகையை அவர்களின் பெற்றோர் செலுத்த வேண்டும். சிறார், போக்குவரத்து பிரிவு போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபடுவதுடன், சாலை விதிகள் பற்றியும் படிக்க வேண்டும் என்பது தண்டனையாக இருக்கலாம். அவரின் பெற்றோருக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 5ன் உட்பிரிவு 180ன்படி, 3 மாதங்கள் சிறை தண்டனையோ அல்லது ரூ.1000 அபராதமோ அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என்று போலீசார் கூறினர்.

8 மாதங்களில் 23 ஆயிரம் வழக்குகள்

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், அருள் சேகர் மற்றும் எஸ்.எஸ்.ஐ.க்கள், போலீசார் பணியில் உள்ளனர்.  18 வயதுக்கு கீழ் பைக் ஓட்டி சிக்குபவர்களுக்கு உடனடியாக விளக்க வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. முதலில் தண்டனை கிடைப்பதை விட,  அவர்கள் சாலை விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  தான் வகுப்புகள் எடுக்கிறோம். இந்த வகுப்புகளில் விபத்து நிகழ்ந்து காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கி வருவதாக போலீசார் கூறினர். நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் மட்டும் இந்த 8 மாதங்களில், சாலை விதிகள் மீறியதாக 23,440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அபராத தொகை பல லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறினர். 

மாணவன் அவினாஷ்...

சமீபத்தில் நாகர்கோவில் கோட்டாரில் சாலை விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் அவினாஷ் உயிரிழந்தான். சைக்கிளில் சென்றவன் மீது பைக் மோதி, மூளை சாவு ஏற்பட்டு இம்மாணவன் இறந்தான். அவனது பெற்றோர், அவினாசின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இருதயம், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் உள்பட 6 உறுப்புகள் எடுக்கப்பட்டன. இவை 6 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவினாசின் இழப்பை அவனது பெற்றோரால் மறக்க முடியாது.  தங்கள் மகன் ஏதோ ஓர் இடத்தில் உயிருடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம் என்று அவினாசின் பெற்றோர் கூறி உள்ளனர். இனியாவது இது போன்ற இறப்புகள் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்றும் அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.